உமா ஓயா திட்டம் சம்பந்தமாக ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தவறான இயந்திரங்களை பயன்படுத்தி சுரங்கத்தை நிர்மாணித்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக வெளிநாட்டு நிபுணர்கள் வந்து மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி தேவையான நபர்களை அழைத்து விசாரணைகளை நடத்த முடியும்.
ஏற்கனவே பெருந்தொகை பணம் செலவிடப்பட்டுள்ள உமா ஓயா திட்டத்தை உடனடியாக நிறுத்தி விட முடியாது.
மக்களின் வாழ்வுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், சரியான தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
உமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி அமைச்சரவை உப குழு ஒன்றையும் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.