கட்டணத்தை குறைப்பதற்காகவும், உணவு வீணாவதை தடுப்பதற்காகவும் உள்நாட்டு ஏர் இந்தியா விமானங்களில் அசைவ உணவு வழங்குவதை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஷ்வணி லோஹனி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் பொருளாதார வகுப்பு பயணிகளுக்கான உணவுப் பட்டியலில் இருந்து அசைவம் நீக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே சமயம் சர்வதேச விமானங்களிலும், உள்நாட்டு விமானங்களில் முதல்வகுப்பு பயணிகளுக்கும அசைவ உணவுகள் வழக்கம் போல் வழங்கப்படும் என ஏர்இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த முடிவுகளை ஏர்இந்தியா 2 வாரங்களுக்கு முன்னதாகவே எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 90 நிமிடங்களுக்கும் குறைவான பயண தூரத்தை உடைய அனைத்து விமானங்களிலும் அசைவ உணவுகள் வழங்குவதை 6 மாதங்களுக்கு முன்னதாகவே ஏர்இந்தியா நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.