சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் கடந்த மஹிந்த அரசாங்கம் கரிசனை செலுத்தவில்லை என்பதையும் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றதாக கருதப்படும் யுத்தக் குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள் போன்றவற்றை முன்வைத்தும், தமிழ் தலைமையையும் இணைத்துக் கொண்டு தென்னிலங்கையின் பிரதான இரண்டு அரசியல்கட்சிகளின் பின்புலத்தில் இருந்து சர்வதேச சமூகம் மஹிந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பியது.
இந்தவிடத்தில் மஹிந்தவின் ஆட்சியில் இருந்த பெரும்பாலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த ஆட்சியிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
மஹிந்தவை மட்டும் தனிமைப்படுத்தி அப்புறப்படுத்துவது மட்டுமே சர்வதேச சமூகத்தின் தேவையாக இருந்தது என்பதையும் அவரது தலைமையின் கீழ் அல்லது அவரது உத்தரவுக்கமைய செயற்பட்ட படைத்தரப்புக்களையோ அல்லது அமைச்சர்களையோ அல்லது அந்தக் கட்சியின் அங்கத்தவர்களையோ குற்றவாளிகள் ஆக்குவது சர்வதேச சமூகத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் தேவையாக இருக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இந்தக் கூட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இணைந்து கொண்டதன் மூலம் தாங்களும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒட்டுமொத்தத்தில் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப உத்தேசிக்கப்பட்ட போதே அனைத்துகுற்றச் செயல்களையும் மூடி மறைப்பதற்கு தமிழ் தலைமைகளின் ஒத்துழைப்போடுஅத்திவாரமிடப்பட்டது என்பது கசப்பான உண்மை.
பொதுவாக நோக்குமிடத்து ஆட்சி மாற்றம் என்பதும் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிக்க வைப்பது என்பதும் ஏற்கனவே சர்வதேச சமூகத்தினால் திட்மிட்ட செயற்பாடாகவே தோன்றுகின்றது.
ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதாக சொல்லப்படும் அல்லது நம்பப்படும் தமிழரசுக் கட்சி சர்வதேச சமூகத்துடனும்,
இலங்கையின் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரண்டு கட்சிகளுடனும் இணைவதை நியாயப்படுத்துவதற்காகவே புதிய அரசியல் யாப்பு, யுத்தக்குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டறிதல், காணி மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் ஜனாதிபதி மற்றும் அதன்பின்னரான பொதுத் தேர்தல் மேடைகளில் பல தரப்பினரதும் வாய் ஞாலங்களாக அரங்கேறின.
அந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. சர்வதேச சமூகம் இந்த நாட்டின் கேந்திர முக்கியத்துவத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அங்கீகாரத்தை புதிய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக் கொண்டது.
தங்களது தேவைமுடிந்த பின்னர் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் இருந்து சர்வதேச சமூகம் மெல்லமெல்ல விலகி வருவதை அவதானிக்க முடிகிறது.
2015 இல் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-01 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34- 1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பது இதனை நன்குபுலப்படுத்துகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் தனித்து செயற்படும் தமிழரசுக் கட்சி இதுவரை காலமும் அரசாங்கத்துடன் ஒன்றிச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு எதிராகதமிழ் தரப்பில் இருந்து வெளிப்படும் கருத்துக்கள் தென்னிலங்கையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்,
பெரும்பான்மை இனவாதிகள் கொந்தளிப்பார்கள், சர்வதேச சமூகத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும், இலங்கை அரசுடனான எமது இராஜ தந்திர உறவுகள் மற்றும் இணக்கச் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்து விடும் என்றெல்லாம் கூறி தமிழ் மக்களின் எழுச்சிகளையும், அவர்களது உரிமைக் குரலையும் வெளிக்கிளம்பாமல் அடக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தது.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணய சபையாகமாற்றப்பட்டது. அதனை வழி நடத்துவதற்காக ஒரு வழிகாட்டல் குழுவும் அந்தகுழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக 6 உப குழுக்களும் அமைக்கப்பட்டன.
தேர்தல்கள் நேரத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதில் நாட்டில்காணப்படுகின்ற அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றுதெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரத்தில் இலங்கையில் மாறி மாறி ஆட்சிசெய்தவர்கள் அனைவரும் தமது பதவிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரத்திற்கானவரம்பெல்லைகளை அதிகரித்து கொள்வதையும், எதிர்கட்சிகளை தலையெடுக்காமல் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு அரசியலமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவேயன்றி,
உண்மையான தேசப்பற்றுடன் அனைத்துஇனங்களும் சமத்துவமாகவும், சமநீதியுடனும், சமவுரிமைகளுடனும் வாழ்வதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்படவில்லை என்பதை இரண்டு பிரதான கட்சிகளும் ஏற்றுக் கொண்டு தேர்தலில் களம்மிறங்கின.
இதன் விளைவாகவே உழுத்து போன, காலத்திற்கு ஒவ்வாத பழைய அரசியல் யாப்பை மாற்றி மேற்சொன்ன விடயங்களை நிவர்த்திக்கும் வகையில் உண்மையான தேசப்பற்றுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று அவர்கள் உத்தரவாதம் அளித்திருந்தனர்.
தான் அரசாங்கத்தின் பக்கம் சார்ந்திருப்பதற்கான நியாயத்தை தமிழ் மக்கள் முன் வெளிப்புடத்துவற்காக தமிழரசுக் கட்சியும் அவர்களின் மனநிலையை உயர்த்தி பிடித்தது.
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரை இரண்டு வருடகால அவகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு ஐநாவில் வழங்கப்பட்டு விட்டது.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை சர்வதேச சமூகம் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த பின்னனியில் ஐ.நாஅறிக்கையிடலாளர்கள் வந்தும் செல்லவுள்ளார்கள்.
இந்த நிலையிலேயே புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. வலிந்து காணாமல் போகச்செய்தலுக்கு எதிரான சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் அதனைகாலம் கடத்தி வருகின்றது.
குறித்த சட்டமூலமானது பயங்கரவாதத்தில் இருந்துநாட்டை காப்பாற்றிய படைவீரர்களை காட்டிக் கொடுப்பதாக அமையும் என்று மஹிந்த தரப்பினர் பிரச்சாரம் செய்தனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த படை வீரர்களை நான் ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று பதிலளித்துள்ளதுடன், அந்த சட்ட மூலத்தையே காலவரையறை ஏதுமின்றி விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதை தடுத்து நிறுத்தியுள்ளார்.
மறுபுறத்தில் இலங்கையின் அனைத்து பௌத்த பீடங்களும் புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதாத்திற்கு வரக்கூடிய நிலையில் பௌத்த குருமார்களின் இந்த தீர்மானம் தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச ஜனநாயக சக்திகள் மத்தியிலும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தவிடத்தில் தம்மீது பழி வந்து விடுமோ என்று அஞ்சிய தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பின் சார்பாக பௌத்த துறவிகள் தமது தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டையும், இணக்க அரசியலில் ஈடுபடுவது தொடர்பாகவும் கூட்டமைப்பின்பங்காளிக் கட்சிகளுடன் கலந்து பேசி அதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கப்படாமையின் விளைவாக தமிழரசுக் கட்சி இன்று தனிமைப்பட்டு இருக்கிறது.
அதை மூடி மறைப்பதற்கு கூட்டமைப்பை கவசமாக பயன்படுத்துகிறது. தற்போது நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகளைப் பார்க்கும் போது அரசாங்கம்விரும்பியோ, விரும்பாமலோ தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல்நிலவுவதையே அவாதனிக்க முடிகிறது.
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆயுட்காலம் அண்மையில் முடிவுக்கு வரவுள்ளது.
இந்தச் சூழலில் அரசியல்யாப்பு தொடர்பான விவாதங்களோ, புதிய சட்ட மூலங்களோ நடப்பு அரசாங்கத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவதுடன் சில வேளைகளில் மஹிந்தவின் கரத்தைவலுப்படுத்துவதாகவும் அமைந்து விடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.
இதனாலேயே மேற்சொன்ன விடயங்களை அரசாங்கம் கிடப்பில் போட முடிவெடுத்துள்ளது. தமிழ் தரப்பைப் பொறுத்தவரையில் மேற்சொன்ன அரசியல் தீர்வு விடயங்கள் ஒருபுறமிருக்க,
அண்மையில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினரின் பிழையான அணுகுமுறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அந்தக் கட்சியின் பெயரை பெருமளவுக்கு களங்கப்படுத்தியுள்ளது.
அதன் ஆதரவுதளத்தில் பாரிய சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அரசாங்கத்தால்நடத்தப்படும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு புதிய அரசியல் யாப்பும்,புதிய சட்ட மூலமும் அந்தக் கட்சிக்கு ஒரு ஆயுதமாக பயன்படக் கூடும்.
ஆகவே,புதிய அரசியல் யாப்பில் என்ன இருக்கிறது என்பதை இரகசியமாக வைத்திருக்க வேண்டியதும், காணாமல் ஆக்கப்பட்டடோருக்கு எதிரான சட்ட மூலத்தை முடிவின்றி வைத்திருப்பதிலும் தமிழரசுக் கட்சிக்கும் தேவை இருக்கிறது.
இந்த இரண்டு விடயங்களை வைத்துக் கொண்டே தமிழரசுக் கட்சி வரப்போகும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலை முன்போலவே சர்வதேசம் பார்க்கிறது.
எமது அரசியல் தீர்வை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டும், அதற்கு ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும் என்று தனது அண்மைக்கால செயற்பாடுகளை மூடிமறைத்து மீண்டும் ஒற்றுமையை வலியுறுத்தி அதன் மூலம் தனது பலத்தை அதிகரித்து கொள்ள கடுமையாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நேரத்தில் வடக்கில் முதலமைச்சர் தலைமையில் புதிய அரசியல் தலைமை ஒன்று உருவானால் அது வடக்கு, கிழக்கு முழுவதிலும் தமிழரசுக் கட்சியின் இருப்பை கேள்விக்குட்படுத்தும்.
ஆகவே, ஒரு தற்காலிக ஏற்பாடாக முதலமைச்சரை எதிரணிக்குதள்ளாத உத்தியை தமிழரசுக் கட்சி மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளன.
தென்னிலங்கை அரசியல் சக்திகள் தங்களின் தேர்தல் வெற்றிக்காக அரசியல் யாப்புமற்றும் புதிய சட்ட மூலங்களை கிடப்பில் போட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியும் அதனையே தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தப் போகிறது. தேர்தல் முடிந்த பின்னர் தென்னிலங்கை அரசியல் சமூகம் வழக்கம் போலவே இழுதடிப்பு நடவடிக்கைளைமேற்கொள்ளும்.
தமிழ் தலைமை மீண்டும் பொறுமை காக்குமாறு மக்களை அறிவுறுத்திதனது கதிரைகளையும், பதவிகளையும் தக்க வைத்துக் கொள்ளும். இதில் மாற்றம்வந்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கு விமோசனம்.