செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருப்பதால் ஆலய திருவிழாவுக்கு வருகை தரும் அடியார்கள் ஆசார சீலர்களாக எமது பண்பாடு, கலாசாரத்துக்கு ஏற்ப ஆலயத்துக்கு வருகை தரவும் என ஆலய நிர்வாகத் தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிர்வாகத்தினரால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
திருவிழாக் காலத்தில் ஆலய உள்வீதி, தேரோடும் வெளி வீதிகளில் வியாபார நடவடிக்கைகள் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. நடமாடும் வியாபாரிகள் இந்த வருடம் தங்களுக்கென ஆலய சூழலில் உள்ள தனியார் காணிகளை வாடகைக்குப் பெற்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஆலய நிர்வகத்திடம் வியாபாரிகளுக்கு வழங்க காணிகள் இல்லாத காரணத்தால் இதனை வியாபாரிகளே தங்கள் வியாபாரம் பற்றி முழுப்பொறுப்பும் உடையவராவார்.
மேலும் ஆலய தரிசனத்துக்கு வரும் எம்பெருமான் அடியார்கள் ஆசார சீலர்களாக எமது பண்பாடு, கலாசாரத்துக்கு ஏற்ப ஆலயத்துக்கு வரவும். மற்றும் ஆலயத்துக்கு வரும் போது உங்களுடன் அழைத்துவந்த சிறுவர்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் உடைமைகளை நீங்களே மிகவும் கவனமாகப் பாதுகாக்கவும். தவறவிட்டு இன்னல்களுக்கு ஆளாவதைத் தவிர்க்கவும்.
மேலும் ஆலயச் சூழலில் சுத்தம், சுகாதாரத்தைப் பேணும் முகமாக முன்மாதிரியாக அனைவரும் நடந்துகொள்ளுங்கள். திருடர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காதீர்கள். ஆற்றில் நீராடவேண் டிய அடியார்கள் ஆற்றில் ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். ஆற்றில் போடப்பட்ட மிதப்பு எல்லைகளைத் தாண்டிச் செல்லாதீர்கள்.
ஆலய தரிசனத்துக்கு வருகைதரும்போது உங்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்தி வருவதைத் தவிருங்கள். இளைஞர்களே எமது பண்பாடு கலாசாரங்களை பாதுகாக்கும் தலைமைத்துவமும் பொறுப்பும், கடமையும் அடுத்தது உங்களைச் சார்ந்தது.
இவற்றுக்கு முன்னுதாரணமாக இளையோர் திகழ வேண்டும். அனைத்து அடியார்களும் சைவப் பாரம்பரியங்களை முழுமையாகக் கடைப்பிடித்து ஆலய திருவிழாக் காலத்தில் எம்பெருமானை தரிசித்து வாழ்வில் நற்பேறு அடையுங்கள் – என்றுள்ளது.