தமிழ்மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வொன்றைக் காண்பதற்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பம் தவறவிடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளது. புதிய அரசியலமைப்பு அமுலுக்கு வருமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
புதிய அரசியலமைப்பில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும், பிரதமரும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் வேறுபட்டவையாக இருந்தாலும்,அரசுக்குள் உள்ளேயும், வெளியேயும் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளைப்பார்க்கும்போது புதிய அரசியலமைப்பு ஒன்று அமுலுக்கு வருவதற்கான வாய்ப்பு தவறிப்போகும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு தற்போதுள்ள தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது அவசியமாகும். அப்போதுதான் நாடாளுமன்றத்திற்கு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும்.
அதேவேளை புதிய அரசியலமைப்பை பௌத்த பீடங்களினதும், பெரும்பான்மை சிங்கள மக்களினதும் இணக்கம் இல்லாமல் ஜனாதிபதியோ, பிரதமரோ நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றிவிட முடியாது.
ஒருவேளை பௌத்த பீடாதிபதிகளையும் மீறி ஜனாதிபதியும், பிரதமரும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முயற்சிப்பார்களேயானால்,பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்திலிருந்து பெரும்பாலும் வெளியேறி புதிய அரசியலமைப்பக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என்று தெரிகின்றது.
பௌத்த பீடத்தையும்,அவர்களால் வழி நடத்தப்படும் பெரும்பான்மை மக்களையும் புறக்கணித்து அவர்கள் விரும்பாத புதிய அரசியலமைப்பை அமுலாக்கம் செய்து, தமது அரசியல் எதிர்காலத்தை முடக்கிக் கொள்ள எவரும் விரும்பமாட்டார்கள். ஜனாதிபதியைப் பொறுத்தவரை தமது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரோ, அடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அதிகாரத்தை பிரதிபலிக்கும் அரசாங்கமொன்றை சந்திக்க நேர்ந்தாலோ தனது பாதுகாப்புக் கருதி வெளி நாடொன்றில் தஞ்சமடையும் நிலைமை ஏற்படலாம். அல்லது அரசியல் வாழ்வை முழுமையாக கைவிட்டு ஒதுங்கியிருக்கும் நிலைமைக்குச் செல்லலாம்.
பிரதமரைப் பொறுத்தவரை மீண்டுமொரு தடவை ஆட்சியை பிடிக்க முடியாவிட்டால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். எனவே இருவரும் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு புதிய அரசியலமைப்பை அமுல்படுத்தும் துணிச்சலற்றவர்களாகவே இருக்கின்றார்.
மறுபக்கத்தில் நல்லாட்சி அரசாங்கம் எதுவரை நீடிக்கும் என்ற நிலைமை வலுவடைந்தவிட்டது. தொடரந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆட்சியில் பங்காளிகளாக இருக்க முடியாது என்று சுதந்திரக் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் தமது நிலைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்து தெளிவுபடுத்தியுமுள்ளனர்.
திடீரென அரசாங்கத்தைவிட்டு விலகாமல் இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்து,அரசாங்கத்தின் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்கச் செய்வதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும்,சரியான நேரம் வரும்போது அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என்றும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டத்தில் மஹிந்த ராஜபக்சவே பின்னணியில் இருக்கின்றார் என்று ஐக்கிய தேசியக் கட்சியினரும் பகிரங்கமாக குற்றம்சாட்டும் அதேவேளை சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும்,ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வரக்கூடியவர்களுடன் இணைந்து ஆட்சியை அமைப்போம் என்று கூறியிருக்கின்றார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சியினர் வெளியேறி பொது எதிரணியுடன் உடனடியாக இணைந்து செயற்படாமல் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் செயற்பட்டாலும், நாடாளுமன்றத்தில் தனியான எதிர்க்கட்சியாக செயற்படவார்கள் என்றும் சுதந்திரக் கட்சியின் செய்தி தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் சுதந்திரக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பதற்கு ஜே.வி.பி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும். அதற்கான ஆதரவை இரு கட்சிகளில் எவர் வழங்கினாலும்,ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கலாமே தவிர நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசியலமைப்பு திருத்தமொன்றை அமுல்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது.
அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படும்போது பிரதான எதிர்க்கட்சியாக சுதந்திரக் கட்சியே 42 ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் இருக்கும். அவ்வாறானதொரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. வழமையைப்போல் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் பங்காளிகளும் ஆளும் கட்சியாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்க்கட்சியாகவும் இருப்பார்கள்.
அவ்வாறான ஆட்சி மாற்றம் ஏற்படுமாக இருந்தால் நல்லாட்சி அரசாங்கம் புதைகுழியில் விழுந்தவிடும், கட்சியை கட்டுப்படுத்த முடியாமல் தனது பிடியை தளர்த்திவிட்டு ஜனாதிபதி தனித்து பிரதமரிடம் சரணாகதி அடைந்தவிடுவார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை இழக்கும். புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் முடங்கிப்போகும்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆக்கபூர்வமான எவ்விதமான முயற்சிகளையும் முன்னெடுக்க முடியாமல் ஆட்சியை நடத்த போராடும் சூழல் தோற்றுவிக்கப்படும்.
அரசுக்கு எதிராக அனைத்துவகையான நடவடிக்கைகளையும், எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும். அவ்வாறானதொரு நிலையில் நாடு பொருளாதாரம், அபிவிருத்தி,உட்கட்டமைப்பு போன்றவிடயங்களில் ஒரு தேக்க நிலையை அடைந்த வீழ்ச்சியை நோக்கிச் செல்லும்.
அப்போது நாட்டினுடைய பிரதான பிரச்சினைகளாக அரசியல் ஸ்திரமின்மையும்,வேறு பிரச்சினைகளும் தலைதூக்குகின்றபோது,தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையானது ஆட்சியாளர்களுக்கு முக்கியத்துக்குரிய பிரச்சினையாகிவிடும்.
அவ்வாறானதொரு பொழுதில் தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாகவும்,தீர்வு தராத சிங்கள தேசத்துக்கு எதிராக தொடர்ந்தும் போராட வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற படிப்பினையை மீண்டுமொரு தடைவ படித்தவர்களாக இருப்பதற்கு தெளிவுபடுத்தும் அரசியல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.மீண்டும் ஒரு தடவை அரசியலமைப்பு எனும்விவகாரம் இலகுவாகத் தொட முடியாத தொலைவில் கிடப்பில் போடப்பட்டுவிடும்.