கட்டார் நாட்டுடான உறவை மீண்டும் தொடர்வதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரபு நாடுகள் தளர்த்தியுள்ளன.
முதலில் 13 நிபந்தனைகளை விதித்திருந்த அரபு நாடுகள், தற்போது அதை ஆறாக குறைத்துள்ளன. பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண இந்த நிபந்தனைகளை கட்டார் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் அவை கூறியுள்ளன.
ஆனால் இந்த நிபந்தனை தளர்வு குறித்து கட்டார் அரசு தரப்பில் இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கட்டார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் துண்டித்தன.
பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மீண்டும் உறவைத் தொடரத் தயார் என்று கூறிய அந்த நாடுகள் அதற்காக 13 நிபந்தனைகளை விதித்தன.
இதனால் நிலைகுலைந்த கட்டார் நாடு தங்களது 2.7 மில்லியன் மக்கள் தொகைக்கு தட்டுப்பாடின்றி உணவு அளிக்கும் பொருட்டு கடல் மற்றும் வான் வழி உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனிடையே நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுடன் கலந்து பேசிய குறித்த நான்கு நாடுகளின் உயர் அதிகாரிகள், கட்டாருடனான நெருக்கடி நிலையை சிக்கலின்றி முடித்துக்கொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்தே நிபந்தனைகளை தளர்த்தியுள்ளன.