கடந்த 2008ம் ஆண்டு 5 பாடசாலை மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விதம் காட்டும் புகைப்படங்களை தொலைபேசி ஊடாக இளைஞர்கள் தமது பெற்றோருக்கு அனுப்பி இருந்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்த கடற்படையினர் சிலர் மனிதாபிமானமாக நடந்து கொண்டதால் இந்த சாட்சியங்கள் கிடைத்துள்ளன.
தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் தமது பெற்றோருடன் பேச இந்த கடற்படையினர் தமது தொலைபேசிகளை வழங்கியிருந்தாகவும் அதனை பயன்படுத்தி இளைஞர்கள் படங்களை எடுத்து தமது பெற்றோருக்கு அனுப்பியிருந்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பான சகல அறிக்கைகளும் எனக்கு தெரியும். கப்பமாக கேட்ட பணத்தை கொடுப்பது தாமதிக்கப்பட்டதால், இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனடிப்படையில், கடத்தல் சம்பவம் அதன் பிறகு நடந்தவை குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் போது படையினரை கைது செய்வதாக கூறுகின்றனர் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.