உடலை விற்றுப்பிழைக்கும் பெண்கள் உள்ள நாடு உருப்படாது என்று சொல்வார்கள் . விபச்சாரம் என்பது இன்றைய நவீன உலகில் கலாச்சாரம் போன்று ஆகிவிட்டது. பெரும்பாலான பெண்கள் வறுமையின் காரணமாகவே விபச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. கணவனை இழந்த பெண்கள் , கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் , குடும்பத்தில் நிலவும் பணக்கஷ்டத்தால் அவதிப்படும் பெண்கள் வறுமையின் கோரப்பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக விபச்சாரம் செய்யும் தொழிலில் நுழைகின்றனர்.
விபச்சாரம் செய்யும் பெண்களிடம் சென்று சுகம் அனுபவிக்கும் ஆணாதிக்க சமூகம் இந்த பெண்களை விபரச்சார தொழில் இருந்து மீண்டு சமூக நீரோட்டத்தில் கலக்க அனுமதிப்பதில்லை.இதன் காரணமாக காலப்போக்கில் விபச்சாரத்தினை தமது பிரதான தொழிலாக ஏற்றுக்கொண்டு அதையே இறுதி வரை தொடரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது .
இது இவ்வாறு இருக்க நகர்ப்புறங்களில் ஆடம்பர வாழ்க்கை மீதான மோகத்தினால் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதும் மறுக்க முடியாத உண்மை . உலகில் பல நாடுகள் விபச்சாரத்தை அங்கீகரித்து வருகின்றன . மற்றைய நாடுகளில் மறைமுகமாக விபச்சாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது . இதன் பின்னணியில் சமுதாயத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளும் ,பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் இருக்கின்றனர் என்பது வேதனையான விடயம் . வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி வெளிநாடு அழைத்துச்சென்று ஏமாற்றி விபச்சார தரகர்களிடம் பெண்களை விற்பனை செய்யும் கொடூரமும் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது . இந்த விபசார தரகர்களிடம் மாட்டிக்கொள்ளும் சிறுமியர் , இளம் பெண்கள் அவர்களிடம் இருந்து வெளியே வர முடியாமல் நாளாந்தம் நரக வேதனையை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது .
பங்களாதேஷ் நாட்டில் சிறுமிகள் பலர் விபரச்சாரத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .பங்களாதேஷ் நாட்டில் விபச்சாரம் சட்ட ரீதியாக அங்கரிக்கப்பட்டு விபசாரத்தினை ஒரு தொழிலாக செய்வதற்கு அனுமதி உண்டு. பங்களாதேஷ் tangail மாவட்டத்தில் உள்ள கண்டபர என்று அழைக்கப்படும் ஹோட்டல் உலகில் விபச்சாரம் இடம்பெறும் இரண்டாவது பெரிய இடமாக திகழ்கின்றது .இந்த கண்டபர ஹோட்டல் 2014 ம் ஆண்டு இடித்து அழிக்கப்பட்டது. இதனால் இங்கு வேலை செய்த நூற்றுக்கணக்கான விபச்சார தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர் .உள்நாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மீண்டும் விபச்சார வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது .
அண்மையில் ஜெர்மன் நாட்டு போட்டோ கிராபர் சான்ட்ரா ஹோயன்(Sandra Hoyn ) என்பவர் பங்களாதேஷ் நாட்டுக்கு சென்று அங்கு விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் அனுபவங்களை திரட்டியுள்ளதுடன் உலகின் மனசாட்சியை உலுக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் .
பங்களாதேஷில் பெண்கள் 12 வயதில் விபச்சார தொழிலில் உள்நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது .விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோனோர் கஷ்டப்பட்ட குடும்பங்களை சேர்த்தவர்களாம் .மற்றைய பெண்கள் விபசார தரகர்களினால் கடத்தப்பட்டவர்கள் . விபசாரத்தில் பெண்கள் உள்நுழையும் போது அவர்கள் bonded என்று அழைக்கப்படுகின்றார்களாம் .ஐந்து வருடங்களுக்கு இந்த பெண்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை.அத்துடன் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை . ஐந்து வருடங்களின் பின்னர் சுயாதீனமாக விபச்சார தொழிலில் ஈடுபடுவதற்கும், பணத்தினை பெற்றுக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படுகின்றதாம் .
முஸ்லீம் நாடான பங்களாதேஷில் இவ்வாறு சிறுமிகள் பாழாக்கப்படுவது மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .சிறுவர் தொழிலார்கள் பற்றி பல மனித உரிமை அமைப்புக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில் பங்களாதேஷில் சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .