அரிய நரம்பியல் மூளை அறுவை சிகிச்சையொன்றின் போது, சரியான நரம்பை கண்டுபிடிக்க வைத்தியர்களுக்கு உதவும் வகையில், நோயாளி கிட்டார் வாசித்த சம்பவமொன்று பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த 37 வயதுடைய கிட்டார் கலைஞரான அபிஷேக் பிரசாத் என்ற நபரது மூன்று விரல்களும் செயலிழந்துள்ளன.
இதற்காக மூளையில் அறுவை சிகிச்சையொன்று செய்யப்பட வேண்டியிருந்த நிலையில், குறித்த அறுவை சிகிச்சை பெங்களூரிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. சுமார் ஏழு மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை இடம்பெற்றது.
அதன்போது, பாதிக்கப்பட்ட நரம்புகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், அதனை கண்டுபிடிக்க வைத்தியர்களுக்கு உதவும் வகையில் ஏழு மணிநேர சத்திரசிகிச்சையின்போது அவர் விழித்திருந்து கிட்டார் வாசித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்த அபிஷேக் பிரசாத், “அறுவை சிகிச்சையின் பின்னர் உங்களது உணர்வை அறிந்துக் கொள்ள வேண்டும். எனவே, கிட்டாரை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் என வைத்தியர்கள் கோரினர். அறுவை சிகிச்சையின்போது எனது விரல்களில் சில மாற்றங்களை உணர்ந்தேன். அதன் மூலமே கிட்டார் இசைத்தேன்” என்றார்.
அதேவேளை இது தொடர்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நரம்பியல் நிபுணர் கூறுகையில், “அனைத்து சோதனைகளும் சாதாரணமாக இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட நரம்பினை கண்டறிய தாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம்” எனக் குறிப்பிட்டார்.