இலங்கையில் சில வருடங்களுக்கு முன்னர் மக்களை அச்சுறுத்திவந்த கிறீஸ் பூதங்கள் எனப்படும் கிறீஸ் மனிதர்களின் அட்டகாசங்கள் தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது.
ஸ்ரீலங்காவின் தென் மாவட்டங்களிலேயே இந்த மனிதர்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவு வேளைகளில் வீடுகளுக்குச் செல்லும் இவர்கள் பெண்களைக் குறிவைத்துத் தாக்கிவிட்டு ஓடுவதும் அவர்கள் முன் நிர்வாணமாக நின்றுவிட்டு ஓடுவதுமாக இந்த அட்டகாசங்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.
முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலேயே இந்த கிறீஸ் மனிதர்களின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்பட்டிருந்தது. தென் மாவட்டங்கள் மற்றும் மலையகப் பகுதிகளில் ஆரம்பித்து பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்த கிறீஸ் மனிதர்கள் மோசமாக தமது கைவரிசைகளைக் காட்டிவந்தனர்.
தற்பொழுது மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலுள்ள சில கிராமப் புறங்களில் இரவுப் பொழுதில் இவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்கு கறுப்பு உடை அணிந்துகொண்டு சென்று அவர்களைப் பயமுறுத்துவதும் வீடுகளுக்குக் கல்லெறிவதும் அவர்களின் உடைகளை எடுத்துக்கொண்டு போவதுமென தினமும் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹங்வெல்ல என்ற இடத்தில் இந்த கிறீஸ் மனிதர்களைத் துரத்திச்சென்ற இளைஞன் ஒருவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார். இதனால் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலை ஏற்பட்டதோடு இவர்களைத் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அக்குரஸ்ஸ என்ற பிரதேசத்தில் ஒரு கிறீஸ் மனிதன் பொதுமக்களிடம் சிக்கி நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணைகளின்மூலம் இவர் ஒரு மன நோயாளி என தெரியவருகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான கிறீஸ் மனிதர்கள் பொதுமக்களால் துரத்திச் செல்லும்போது இராணுவ மற்றும் கடற்படை முகாம்களுக்குள் சென்று அடைக்கலம் தேடியமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தில் நாவாந்துறைப் பகுதியில் கடற்படை முகாமுக்குள் சென்ற கிறீஸ் மனிதனால் பொதுமக்களுக்கும் கடற்படைக்குமிடையில் மோதல் நிலை ஏற்பட்டு பின்னர் கடற்படையினரால் அந்தப்பகுதி மக்கள் மோசமாகத் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.