நடிகர் கமல்ஹாசனுக்கும், அமைச்சர்களுக்கும் அரசியல் ரீதியாக மோதல் ஏற்பட்டு உள்ளது. ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்கள். இதனால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாகி இருக்கிறது. கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரசிகர்களையும், பொதுமக்களையும் அமைச்சர்களுக்கு எதிராக திருப்பி விடும் நடவடிக்கைகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு உள்ளார். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஆதாரத்துடன் அவர்கள் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
தவறுகளை தட்டிக்கேட்கும் தைரியசாலியே என்று சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதுபோல் வாக்களித்தவனுக்கு கேட்கும் உரிமை கிடையாதா? சுயநலபாதையில் திரியும் நீங்கள் பொதுநல பார்வையில் பேசிய ஒரு சாமானியரை உலக நாயகனை சீண்டி பார்க்க வேண்டாம் என்ற வாசகங்களுடனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.