அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள். விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும்.
அமாவாசை, பவுர்ணமி திதிகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டு விரதங்களும், முறையே காலமான தாய், தந்தை ஆகியோரை குறித்து அவர்கள் நற்கதியடைய அவர்களின் பிள்ளை களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் ஆகும்.
சூரியனை பிதுர்க்காரகன் என்றும், சந்திரனை மாதூர்க்காரகன் என்றும் அழைக்கிறார்கள். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் பாவங்கள் விலகும். தீ வினைகள், கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும்.
ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை திதி, பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
‘அமா’ என்றால் ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்தது என்று பொருள். ‘வாசி’ என்றால் சாதகமான அல்லது வாய்ப்பான என்னும் கருத்தில் வருகிறது. ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். அத்துடன் தேவர்களும் அமாவாசையின் அதிபர் களாக உள்ளனர். பூமியில் உள்ளவர்களை பொருத்த மட்டில் ஒவ்வொரு அமாவாசையும் முக்கியமானது. பிதுர் கருமத்திற்கு உகந்த நாள்.
சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் உறையும் ‘பிதுர் லோகம்’ உள்ளது.
ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.
நோயின்றி சுகமாக வாழவும், சகல செல்வங்களையும் பெற்று இனிதாக வாழவும் பிதுர்க்களை திருப்தி செய்ய வேண்டும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை போட்டு, அவர் களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க, கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.