தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2017-19-ம் ஆண்டுக்கான தேர்தல் 30-ந்தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவு சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும்.
தேர்தல் முடிவு அன்று இரவே அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், தேர்தல் அதிகாரியாக முன்னாள் மாவட்ட நீதிபதி கே.பாலசுப்பிரமணியன் இருப்பார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் ஓட்டுப்போட தகுதி உள்ளவர்கள் 2,037 பேர். இந்த தேர்தலில் ‘புது வசந்தமணி’, ‘புதிய அலைகள் அணி’ என்ற 2 அணிகள் போட்டியிடுகின்றன.
‘புது வசந்தமணி’ சார்பில் தலைவர் பதவிக்கு டைரக்டர் விக்ரமன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2 முறை தலைவர் பதவி வகித்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி போட்டியிடுகிறார்.
துணைத்தலைவர்கள் பதவிக்கு டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு டைரக்டர் பேரரசு போட்டியிடுகிறார். இணைச்செயலாளர்கள் பதவிக்கு டைரக்டர்கள் ரமேஷ் கண்ணா, மனோஜ்குமார், ஏ.வெங்கடேஷ், அறிவழகன் என்ற சோழன் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.
‘புதிய அலைகள் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கும் யாரும் போட்டியிடவில்லை. துணைத்தலைவர் பதவிக்கு சுப்பிரமணியன் சிவா போட்டியிடுகிறார்.
பொருளாளர் பதவிக்கு ஏ.ஜெகதீசன் போட்டியிடுகிறார். இணைச்செயலாளர்கள் பதவிக்கு பாலமுரளி வர்மன், ஐந்துகோவிலான், நாகராஜன் மணிகண்டன், ராமகிருஷ்ணன் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.