நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நீதிபதி இளஞ்செழியன் மீது இன்று இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாச்சூட்டுச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிப திஇளஞ்செழியன் அவர்களது வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வன்மையாக கண்டிக்கிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடல் நிலை விரைவில் தேறவும் நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம்.
இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்கொண்டுவர வேண்டும் எனவும், இதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய சதித்திட்டங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பொலிஸ்மா அதிபரை நாம் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி நிர்வாகத்தில் ஈடுபட்டிருப்போர் மீது இவ்வாறான வன்முறை பிரயோகிக்கப்படுவதனை நாம் கடுமையாக கண்டிக்கும் அதேவேளை யாழ். குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் இப்போது இன்னுமொரு படிநிலையை அடைந்துள்ளமையானது எமது ஆழ்ந்த கவனத்தை ஈர்க்கிறது.
இந்தநிலைமை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும் என்றும் இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது என்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.