ஆடி அமாவாசையன்று அனைவரும் வான் உலகில் இருந்து, தம் குடும்பத்தாரைத் தேடி பூமிக்கு வந்து விடுவார்கள். அவர்கள் நம் வீட்டில்தான் இருப்பார்கள்.
நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா? அவர்களை பார்க்க வைத்து விட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிடலாமா?
அவர்களது பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை அல்லவா? மறைந்த அம்மாவும், அப்பாவும் நாம் ஏதாவது தர மாட்டோமா என்று காத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை அப்படியே விட்டு விட்டால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்.
அவர்கள் மீண்டும் நம் வீட்டில் இருந்து, பித்ருலோகத்துக்கு புறப்பட்டு போகும் போது, பசியும் பட்டினியுமாக செல்ல நேரிட்டால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பார்கள்.
நம்ம மகன், மகள் நம்மை கவனிக்கவே இல்லையே என்று கோபத்தில் சாபம் கூட கொடுக்க வாய்ப்புள்ளது. இதுதான் பாவமாகவும், தோஷமாகவும் மாறிவிடும்.
இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக் கூடாது. அதற்கு நாம் அமாவாசை தினத்தன்று கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.
உரிய வகையில் அவர்கள் தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும்.
நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்மா பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்¢க்கையில் மேம்பாடு உண்டாகும்.