யாழ். நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார் என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து எமது செய்தி சேவை அவரிடன் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நானே இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றேன். இந்த துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல.
இது நூறு வீதம் உறுதியானது. முன்னாள் போராளி ஒருவர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலருடன் முரண்பட்டுக்கொண்டு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார்” என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.