2017 இலக்கம் 9 என்ற காணாமல் போனோர் தொடர்பான செயலகம் (திருத்தம்) சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிறுவனம் “செயலகம்” என அழைக்கப்பட்டாலும் அது நீதிமன்றத்திற்கு இணையானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்த சங்க சபையினருக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் சட்டத்தின் 12 வது பந்திக்கு அமைய செயலகம் முறைப்பாடுகளை ஏற்று விசாரணைகளை நடத்தும். சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களை பெறும்.
இதனையடுத்து குற்றம் சுமத்தப்படும் நபர்களை அழைத்து உத்தரவுகளை பிறப்பிக்கவும் விசாரணைகளை நடத்தவும் நீதிமன்ற இணையான அதிகாரங்கள் இந்த செயலகத்திற்கு உள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் சட்டமூலத்தை அமுல்படுத்தும் வகையில் ஜனாதிபதி அண்மையில் அதில் கையெழுத்திட்டதுடன் அது நல்லிணக்கத்திற்காக எடுக்கப்பட்ட முன்னோக்கிய நடவடிக்கை என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட இந்த சட்டமூலத்தை கூட்டு எதிர்க்கட்சி எதிர்த்தது.
இந்த எதிர்ப்பையும் மீறி, ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இணைந்து பலவந்தமாக சட்டமூலத்தை நிறைவேற்றின.
மேலும் சட்டத்தின் 12 வது பந்திக்கு அமைய செயலகத்தின் அதிகாரிகள் இரவு, பகல் என எந்த நேரமாக இருந்தாலும் பொலிஸ் நிலையங்கள், படை முகாம்கள் அல்லது சிறைச்சாலைக்குள் சென்று அவர்களுக்கு தேவையான ஆவணங்கள், தேவையானவற்றை எடுத்துக்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
21 பந்திக்கு அமைய உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த எந்த தரப்பிடம் இருந்து நிதி ஆதாரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இதனடிப்படையில், குறித்த செயலகத்திற்கு வெளிநாடு அரசுகள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் அல்ல தடை செய்யப்படாத புலம்பெயர் புலிகள் அமைப்பின் நிறுனங்களிடம் இருந்து நிதியை பெற முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.