மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் 13 வயது மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய வாழைச்சேனை வாகனேரி பிரதேசத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஆலய உற்சவத்திற்கு சென்று வீடுதிரும்பிய நிலையில் வீட்டின் கதவை பூட்டாது அனைவரும் நித்திரைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் குறித்த வீட்டிற்குள் முகத்தை மூடியவாறு இளைஞர் ஒருவர் உட்புகுந்து சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து அவரை தூக்கிச் சென்றுள்ளார்.
இதன்போது, சிறுமியின் சகோதரி, தனது சகோதரியை இளைஞர் ஒருவர் தூக்கி கொண்டு ஓடுவதை அவதானித்து சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் சிறுமியை தேடியபோது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அதே ஆலய உற்சவத்திற்கு சென்றிருந்த 15 வயது சிறுமியை அதிகாலை 1.30 மணியளவில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
இதன்போது அங்கிருந்த இளைஞர்கள் அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஒடியுள்ளதுடன் அவருடன் சென்ற மாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.