படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.ரியாழ் இன்று (திங்கட்கிழமை) சாட்சியளித்தார்.
யாழ்.மேல் நீதிமன்றில் நீதாய தீர்ப்பாயத்தின் மூன்றாம் கட்ட விசாரணைகள் இன்று (திங்கட்கிழமை) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசி மகேந்திரன் தலைமையில் கூடியது.
வழக்கு விசாரணையின் போது, 7 பேர் மன்றில் சாட்சியாளர்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.ரியாழ் வழக்கின் 24வது சாட்சியாக சாட்சியமளித்தார்.
இன்றைய வழக்கு விசாரணைகள் யாவும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணை யாழில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என கருதப்படும் நிலையில், பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.