அறத்தை நிலைநாட்டுவதற்கு அயராதுழைத்த நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் குறித்து மிகவும் கவலை அடைகிறேன். புனிதமான நல்லூர்க் கந்தன் வீதியில் இத்துயரச் சம்பவம் நடைபெற்றது மேலும் வேதனை தரும் செய்தியாகும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீக சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி- ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீதிபதி இளஞ்செழியனைப் பாதுகாப்பதற்காகத் தனது உயிரை அர்ப்பணம் செய்த சார்ஜண்ட் ஹேமச்சந்திரவின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கிறேன்.
கௌரவ நீதிபதி கடந்த காலங்களில் எம் மண்ணில் அமைதியை உருவாக்குவதற்கு அயராது உழைத்து வருபவர்.
அவரது பணி தொடரவேண்டும் என இறைவனைப் பிராத்திக்கிறேன். எம்மண்ணில் நிரந்தர அமைதியும், நீதியும் நிலைப்பதற்கு உதவுகிறவர்களை நாம் போற்ற வேண்டும்.
அச்சுறுத்தல்களால் அறம் தோற்று விடாது. உண்மை என்றும் வெல்லும். மக்களின் நம்பிக்கையையும், அபிமானத்தையும் பெற்ற கௌரவ நீதிபதிக்கு ஏற்பட்ட சம்பவம் மக்களைத் திடுக்கிட வைத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இப்பாரதூரமான சம்பவத்தைக் கண்டிப்பதோடு எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் காக்க உரியவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.