யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளன.
அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.
பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து தற்போது உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் ஹேமசந்திரவின் பூதவுடலுக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நேற்றைய தினம் வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமசந்திர, யாழ். நல்லூர் வீதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு என நாட்டின் பல்வேறு பாகங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.