தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார். கமலின் கருத்துக்கு அமைச்சர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். சிலர் விமர்சனங்களுடன் ஆதரவு தெரிவித்தனர். கமலின் பேச்சுக்கு எழுந்த குறிப்பான விமர்சனமாக அதிமுகவுக்கு எதிராக தான் குற்றம்சாட்டி வருகிறார். திமுக ஆட்சியில் ஏன் குறை கூறவில்லை என்பதாகும். திமுகவின் ஊதுகுழலாகவே கமல் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ”என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”நான் ஊழலுக்கு எதிரானவன். எந்தவொரு கட்சிக்கும் எதிரானவன் அல்ல. அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் கிளர்ச்சி செய்கிறேன். புரட்சியாளர்கள் மரணத்திற்கும், தோல்விகளுக்கும் அஞ்சாதவர்கள். நீங்களுமா?” என்றும் கூறியுள்ளார்.