நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்கள் முந்நூறு பேர் கொண்ட குதிரைப்படையை அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) தலைமையில் ஒரு புனிதப் போருக்காக அனுப்பினார்கள். அந்தக் குழு குறைஷிகளின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அக்குழு அந்த இடத்திலேயே அரை மாதம் தங்க வேண்டியிருந்ததால் சாப்பாடு பற்றாக்குறை ஏற்பட்டது. பாதி வழியிலேயே அவர்கள் கையிருப்பில் இருந்த பயண உணவு தீர்ந்து போய்விட்டது.
அபூ உபைதா(ரலி) அந்தப் படையின் கைவசமிருந்த கட்டுச் சாதங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டும் படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டன. இரண்டு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்கள் சேர்ந்தன. அபூ உபைதா(ரலி) அவற்றைப் படை வீரர்கள் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கொடுத்து வந்தார்கள். இறுதியில், அவையும் தீர்ந்து போய்விட்டன. கடுமையான பசியில் இருந்ததாலும், வேறு உணவு ஏதும் இல்லாததாலும், கருவேல மரத்தின் இலையைச் சாப்பிட்டு வந்தனர். எனவே அந்தப் படைப்பிரிவுக்கு ‘கருவேல இலைப்படைப் பிரிவு’ (‘ஜைஷுல் கபத்’) என்று பெயர் சூட்டப்பட்டது.
அப்போது ‘அம்பர்’ என்றழைக்கப்படும் பெரிய திமிங்கல வகை மீன் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியது. அதிலிருந்து அக்குழு அரை மாதம் வரை சாப்பிட்டனர். அந்த மீனின் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்தனர். அவர்களின் மேனிகள் செழுமையடையும் அளவிற்கு அதன் கொழுப்பை எடுத்துப் பூசிக்கொண்டனர்.
அப்போது அபூ உபைதா(ரலி) அந்தப் பெரிய மீனின் விலா எலும்புகளில் ஒன்றையெடுத்து அதைப் பூமியில் நட்டு வைத்து, அதன் கீழே தம்முடனிருந்த மிக உயரமான மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு அந்த எலும்புக் கூட்டுக்குக் கீழே நடந்து சென்றார்கள். ஆனால், அவற்றை அது தொடவில்லை, அந்த மீனின் எலும்பு அந்த அளவுக்குப் பெரியதாக இருந்தது.
அதனுடைய இறைச்சியிலிருந்து பெருமளவை அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டனர். மதீனா திரும்பியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறிய போது “இது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும். உங்களிடம் ஏதாவது அதில் மீதமிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்கள்” என்றார்கள். அதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு வேண்டிய உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; யாவரையும் மிகைத்தவன்.