பணம் எனப்படும் செல்வத்திற்கு அதிதேவதை மகாலட்சுமி என்று புராணங்கள் கூறுகின்றன. அவளது அருளைப் பெற வேண்டி விசேஷ நாட்களில், வீடுகளில் லட்சுமி பூஜை மற்றும் ஹோமங்கள் செய்வார்கள். மேலும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை தானம் செய்வதும் வழக்கம்.
உண்மை பேசுபவர்கள், தூய்மையாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்திருப்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள், புறம் பேசாதவர்கள், குழந்தைகளை துன்புறுத்தாதவர்கள் ஆகியோர்களிடம் மகாலட்சுமி எப்போதும் இருப்பாள் என்கிறது புராணங்கள். அதனால் மகாலட்சுமியின் பாத வழிபாடு என்பது இக வாழ்வின் நலன்களை பெற்றுத் தருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது ‘காமதேனு’ என்ற பசு, பொன்மயமான ஒளி பொருந்திய ‘உச்சைசிரவஸ்’ என்ற குதிரை, ‘ஐராவதம்’ என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை யானை, பஞ்ச தருக்கள் எனப்படும் அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகிய விருட்சங்கள், ‘கவுஸ்துபம்’ என்ற அதிசய மணிமாலை, லட்சுமியின் அக்கா ஜேஷ்டாதேவி, அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினர்.
அதன் பிறகு தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. தாமரை மலர் மாலையை கைகளில் ஏந்தியவளாய் அவதரித்த அவள், தனக்கு உகந்தவர் மகாவிஷ்ணு என்று அறிந்து அவருக்கு மாலையை அணிவித்து அவரது மார்பில் இடம்பெற்றாள். அவ்வாறு தோன்றிய மகாலட்சுமியின் பாதங்களில் 16 வகையான சின்னங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை கண்ட தேவர்கள் அனைவரும் மகாலட்சுமியின் பாதங்கள் பதிந்த சின்னங்களை தம்முடன் எடுத்துச்சென்று தமது இல்லங்களில் வைத்து பூஜை செய்து பல ஐஸ்வரியங்களை பெற்றதாக ஐதீகம்.