புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான விருப்பங்களுடன் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகளை இந்தச் சமூகம் நிம்மதியோடு வாழவிடப்போவதில்லை. முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் 12000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும்.
உண்மையில் 12000 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டார்களா என்பதை இதுவரை எந்தவொரு தமிழர் தரப்புமோ, சர்வதேச தரப்புகளுமோ ஆராய்ந்து பார்த்து உறுதிப்படுத்தவில்லை.
அவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்த எத்தனை பேர் விடுவிக்கப்பட்டார்கள் என்பதோ,அவர்களில் எத்தனைபேர் முழு ஆரோக்கியமானவர்கள், எத்தனைபேர் அவையங்களை இழந்தவர்கள்,முழுமையாக இயங்க முடியாதவர்கள் எத்தனைபேர் என்பது பற்றிய விபரங்களையும் இன்னும் எவரும் ஆராய்ந்து பார்க்கவில்லை.
அவர்களில் எத்தனைபேர் திருமணமானவர்களாக இருந்தார்கள், அவர்களின் தொழில்வாய்ப்புக்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் என்ன? என்பதைப்பற்றிய தரவுகளும் எவரிடமும் இல்லை.
இந்த நிலையில் முன்னாள் போராளிகள் எனப்படுவோர் தற்போது எவ்வாறு சீவிக்கின்றார்கள். அவர்களின் சமூக நிலைமை என்ன? என்பதைப்பற்றிய எந்தவொரு ஆராய்ச்சியும் எவராலும் நடத்தப்படவில்லை. மத்திய அரசாங்கம் அவ்விதமான தேடலை நடத்தவில்லை. அவர்களிடம் அந்த அக்கறையையும் எதிர்பாரக்க முடியாது. துரதிஷ்டவசமாக மாகாண சபைகளுக்கூடாகவும் இவர்கள் தொடர்பான மதிப்பீடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
தாயகத்தின் தெருக்களில் மாவீரர்களாக உலாவித்திரிந்த முன்னாள் புலிகள் தற்போது, அதேதெருக்களில் ஆயுதத் தலைமையும் இல்லாமல், அரசியல் தலைமையும் இல்லாமல் அநாதைகளைப்போல்,யுத்த வடுக்களைச் சுமந்து குற்றவாளிகளைப்போல் கூனிக்குறுதி திரிகின்றார்கள்.
அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. பிள்ளைகளை படிக்கச் செய்ய போதுமான வருமானம் இல்லை. கடன் தருவதற்கும் யாரும் இல்லை. கூலி வேலை செய்வதைத் தவிர வேறு வழியுமில்லை.
முன்னாள் புலிகளின் கூட்டுப் போராட்டத்தையும்,தியாகத்தையும் பெருமிதத்துடன் கூறிக்கொள்வோர் எவரும் முன்னாள் புலிகளை திரும்பியும் பார்ப்பதில்லை.
முன்னாள் புலிகள் சமூகத்தின் புறக்கணிப்புக்களுக்கும், அழுத்தங்களுக்கும் முகம்கொடுப்பதற்காக பல முயற்சிகளை மெற்கொண்டிருந்தார்கள். அரசியல் கட்சியை ஆரம்பித்தார்கள்.
அதுவும் வடக்கில் ஒரு பிரிவும், கிழக்கில் ஒரு பிரிவுமாக இருக்கின்றார்கள். முன்னாள் போராளிகளுக்காக தொண்டு நிறுவன செயற்பாடுகளை அவர்கள் ஆரம்பித்தபோதும் அவர்களுக்கு எவரும் எதிர்பார்த்த அளவில் உதவவில்லை.
முன்னாள் புலிகளை எந்தவகையிலும் ஒன்று சேர்ந்துவிடுவதற்கு இடமளித்துவிடக் கூடாது என்பதில் படையினர் மிக தெளிவாக இருக்கின்றார்கள்.அடிக்கடி அவர்களைத் தேடி வீடுகளுக்குச் சென்று விசாரிப்பதும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பதும் படையினரின் நாளாந்த வேலையாக இருக்கின்றது.
தாயகத்தில் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அரசியல் தலைமைகள் மக்களையும், முன்னாள் போராளிகளையும் மறந்து தமது சுகபோகங்களுக்குள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மென் தமிழ்த் தேசியம் பேசுவதிலும்,கொழும்புடன் இணக்க அரசியல் செய்வதிலும் அக்கறையோடு இருப்பதால் அவர்களுக்கு இனிமேல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டத்தை முன்னிறுத்திச் செயற்படுவதற்கு தேவை இல்லை. இனிமேல் புலிகளின் தலைவர் பிரபாகரனையோ, அவர் தொடக்கி வைத்த அரசியல் பயணத்தையோ, புலிகள் இயக்கத்தின் தியாகத்தையோ முன்னிறுத்தி அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவற்றை எல்லாம் கடந்த புனிதமான அரசியலை நோக்கி தாம் வந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
அகவே அவர்கள் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை அரவணைத்துச் செயற்படப்போவதில்லை. மறுபக்கத்தில் வன் தமிழ்த் தேசியம் பேசும் தமிழ்மக்கள் ஐக்கிய முன்னணியினர் அரசியல் தாம் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை ஆரம்பித்திருப்பதால்,உள்ளுராட்சி சபைகள், மாகாணசபைகள், நாடாளுமன்றம் என இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் தாம் கூட்டமைப்பை எதிர்த்து போட்டியிடப்போவதாக மக்களிடையே பரப்புரை செய்து வருகின்றார்கள். அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தாமே மாற்றுச் சக்தி என்று கூறிவருகின்றார்கள்.
அவர்கள் முன்னாள் புலி உறுப்பினர்களை அரவணைப்பதுபோல் காட்டிக்கொள்கின்றார்கள். அவர்களில் சிலரை ஊருக்கு ஒருவராகத் தெரிவு செய்து அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி தமக்கான ஏவலர்களாக வைத்திருக்கவும் முயற்சிக்கின்றனர். பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு யார்? பணத்தை நீட்டினாலும் அவர்களுக்கு விசுவாசமாக வேலை செய்வார்கள் என்று இவர்கள் நம்புகின்றார்கள்.
ஆகவே முன்னாள் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து தம்மோடு அணிதிரண்டு நிற்கின்றார்கள் என்ற ஒரு தோற்றத்தை இவர்கள் வெளிக்கட்டி வருகின்றார்கள். இந்த அணியினரும் அரசியல் பதவிகளைப் பெற்றுக்கொண்டவுடன் தமது அரசியல் தந்திரோபாயங்களை வகுக்கத் தொடங்கும்போது முன்னாள் போராளிகளை புறமொதுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
அப்போது ஷசீச்சி இந்தப்பழமும் புளிக்கின்றது என்ற அனுபவத்துடன் அவர்களைவிட்டும் முன்னாள் போராளிகள் ஒதுங்கிக்கொள்ளும் நிலைமை ஏற்படும். இவ்வாறு முன்னாள் போராளிகளின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பெற்றுக்கொள்ள முற்படும் எவரும் முன்னாள் போராளிகளின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக எதையும் செய்யப்போவதில்லை. தவிரவும் தமக்கு அரசியல் ரீதியாகக் கிடைக்கும் வெற்றிகளை முன்னாள் போராளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்போவதுமில்லை.
இந்த நிலையில் இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்கள் ஏனைய இனங்களைப்போல் தலை நிமிர்த்தி கௌரவமாகவும், பொருளாதார வளர்ச்சியுடனும் வாழ்வதற்கு உலக தேசமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் ஒன்றினைந்து பொருளாதார பலத்துடன் தம்மை ஒருங்கிணைந்து இன்று பலமான இனமாக வாழ்வதைப்போல், தாயகத் தமிழர்களும் பலம்பெறுவதற்கும் பொருளாதார கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.
ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டத்தை வலுவாக முன்னெடுப்பதற்கு பொருளாதார பலமாக இருந்ததைப்போல்,தற்போது அரசாங்த்தினாலும், தமிழ் அரசியல் தலைமைகளினாலும் கைவிடப்பட்டு அநாதரவாக இருக்கும் தாயகத் தமிழர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளே ஆதாரமாக இருந்து உதவ வேண்டும்.
நாட்டுக்கு நாடு பிரிந்து தனித்தனிக் குழுக்களாக இருக்காமல், துஷ்பிரயோகங்களுக்கு இடம்கொடுக்காமலும், தாயக மண்ணினதும், மக்களினதும் மீள் எழுச்சிக்காக ஒன்றினைந்து செயற்பட வேண்டும். உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் சுமார் 15 இலட்சம்பேர் என்று கூறப்படுகின்ற நிலையில்,மாதாந்தம் ஒருவர் 10 டொலர் அன்பளிப்புச் செய்தால்,பெருந்தொகையான பணம் தாயகத்திற்கு வந்து சேரும்.
பொருளாதார ரீதியாக தமிழர்கள் பலமடைந்தால்,தாயகத்தில் புதிய தொழில்பேட்டைகளை உருவாக்கி முன்னாள் போராளிகள் உட்பட எமது இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். பாரம்பரிய தொழிற்துறைகளை மீளக் கட்டியெழுப்பலாம்.
தாயக உறவுகளிடம் தமக்குத் தேவையான உற்பத்திகளை இறக்குமதிசெய்து ஏற்றுமதி வருமானத்தை தாயக மக்கள் பெற்றுக்கொள்ள வழி காட்டலாம்.சுற்றுலாத்துறையை வளர்த்தெடுப்பதற்கு புலம்பெயர்ந்த உறவுகள் தாமும் முதலீகளைச் செய்யலாம்.அவ்வாறான திட்டம் வகுக்கப்பட்டு எல்லோரும் முயற்சி செய்தால் அழிவடைந்து நலிந்து கிடக்கும் தாயகத்தை குறுகிய காலத்தில் எழுச்சியோடு தூக்கி நிறுத்தலாம்.
ஈழத் தமிழர்களின் எல்லா வகையான வெற்றிக்கும் முதன்மைத் தேவையானது ஒற்றுமையாகும்.தமிழர்கள் ஒருபோதும் ஒற்றுமையாக சிந்திக்கப்போவதில்லை. ஆகவே அவர்களை கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டால் எஞ்சிய தமிழர்களும் நாடோடிகளாக போய்விடுவார்கள் என்றும், அதுவும் முடியாதவர்கள் வாழ்க்கையை வெறுத்து உணர்ச்சியற்று வாழப்பழகி விடுவார்கள் என்றும் சிங்கள அதிகார வர்க்கம் நினைப்பதில் தவறு இருக்கப்போவதில்லை. இப்படியே போனால் தமிழனும், தமிழும் மெல்லச் சாவார்கள்.