நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப்படுக்கையில் விழுந்துள்ள நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பதவிக்காக எதையும் பேசாது மௌனமாக இருப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தியாவசியப் பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழ் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் பிரகடனம் மீதான விவாதம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்த இவ்வாறு விமர்ச்சித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெட்கம் கெட்ட அமைச்சர் எனவும் தினேஷ் குணவர்தன விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன ராஜபக்சவினர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றார். கைதுசெய்யப்படுவார்கள் என்றும் கூறுகின்றார்.
அவர் என்ன நீதி அமைச்சரா? வெட்கங்கெட்டவராக இருக்கின்றார். சட்டத்தை தனது சட்டைப்பைக்குள் போட அவர் முற்படுகின்றார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் நேற்று (நேற்றுமுன்தினம்) சட்டவிரோதமான முறையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாக்கெடுப்புக் கோரியபோது அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாடாளுமன்ற ஜனநாயகம் மரண ஊர்வலம் செல்கையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தப் பதவிக்காக மௌனியாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.