யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 10 பேருக்கும் அப்பால் இரு பெரிய கழுகுகள் உள்ளதாகவும், அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், மறைந்திருக்கும் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 10 பேருக்கும் மேலாக முக்கியமான இரு பெரிய கழுகுகள் கைது செய்யப்படாமல் இருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் கைகோர்த்து சம்பவத்தை மறைப்பதற்கு செயற்பட்ட விதம் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மட்டும் அல்ல மேலும் இருவர் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளனர்.
சர்வதேச போதைவஸ்து கடத்தல்காரர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த சம்பவத்தில் சுவிஸ் குமாரை பாதுகாப்பதற்கு பண ஆறு பாய்ந்ததாக தெரிவயவருவதாகவும் தனது அறிக்கையில் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல்வாதி மற்றும் கல்விமானை நோக்கியே இந்த பண ஆறு பாய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.