வரிகளை அவ்வளவு எளிதாக மாற்றவோ, குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்று காரணம் காட்டி வரிக்குறைப்பை வேண்டுமானால் கோரலாம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
நல்லூர் சங்கிலியன் பூங்காவில் வட மாகாண பனை அபிவிருத்தி கண்காட்சி இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் கூட்டுறவுச் சங்கங்களின் ஊழல் சம்பந்தமாகக் குறிப்பிட்டார்.
சமாசங்களின் தலைவர் கணேசன் கூறுகையில், சங்கங்களின் வழிநடத்தல் எவ்வளவு சிரமமானது என தெரிவித்ததுடன், வரியினை குறைத்தால் சங்கங்களை வலுவுடன் நிர்வகிக்க முடியும் என்றார்.
இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புபடாத விடயங்கள். சங்கங்கள் வருடா வருடம் தமது கணக்குகளை முறையாகக் கணக்காய்வு செய்தால் ஊழல்களை ஓரளவு குறைக்க முடியும்.
வரிகள் என்பது மத்திய அரசாங்கத்தினால் தமது தேசியக் கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் நாடு பூராகவும் விதிக்கப்படுபவை. அவற்றை அவ்வளவு எளிதாக மாற்றவோ, குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ முடியாது.
வேண்டுமானால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்று காரணம் காட்டி வரிக்குறைப்பைக் கோரலாம் என சுட்டிக்காட்டினார்.