இனவாத சக்திகள் தனது அரசாங்கத்தின் அமைச்சரவைக்குள் இருந்தாலும் அதற்கு எதிராக போராடுமாறு பிரதமர் நாட்டின் இடதுசாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி.விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கிடைக்கும் வகையிலான அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது இனவாத சக்திகளுக்கு வலுவூட்டும் வகையில் எப்படியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றை தோற்கடிக்க தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இடதுசாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரஜைகள் சக்தி அமைப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
நாற்பது ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று ஜனநாயக செயற்பாடுகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தால், உலகம் முழுவதும் பாரிய மாற்றத்திற்கான ஆரம்பமாக இது இருக்கும் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.