யாழ். மாதகல் பகுதியில் இளம் குடும்பப்பெண் ஒருவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதகல் மேற்குப் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் சாலினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிரஞ்சன் – சாலினி காதலித்துத் திருமணம் முடித்துள்ளதுடன், சில வருடங்களில் தொழில் நிமித்தம் நிரஞ்சன் வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில் வெளிநாடு சென்ற கணவனும், மனைவியும் கடந்த பல நாட்களாகத் தொலைபேசியில் முரண்பட்டு வந்துள்ளனர்.
நேற்றைய தினம் இருவரும் தொலைபேசியில் உரையாடிய போது இருவருக்குமிடையிலான வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை கணவர் நேரடியாகக் காணொளியூடாக பார்க்கும் படி செய்து விட்டு தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத கணவர் மாதகலில் தனது வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் பலசரக்குக் கடையொன்றை நடத்தி வரும் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தையாருக்கு) தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்ணின் தந்தை வீட்டுக்குச் சென்று பார்த்த போது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.