அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின்கீழ் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தகவலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசு நேற்று மதியம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.
எனினும், குறித்த பிரகடனம் நிறைவேற்றப்படவில்லை என்று பொது எதிரணியான மஹிந்த அணியும், ஜே.வி.பியும் அறிவித்துள்ளன.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இவ்விரு கட்சிகளும் நேற்று மதியம் நடத்திய செய்தியாளர் சந்திப்புகளின்போதே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி கருத்து வெளியிட்ட மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின்கீழ் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் திட்டத்துக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கவில்லை.
உரிய வகையில் வாக்கெடுப்பு நடக்கவில்லை. செங்கோலானது உரிய இடத்தில் இருக்கவில்லை. செங்கோலை படைக்கள சேவிதர் தூக்கிவிட்டார். உரிய இடத்திலிருந்து அதைத் தூக்கிய பின்னர் சபாநாயகர் வெளியேறவேண்டும். அதுவே நாடாளுமன்ற சம்பிரதாயம்.
எனவே, எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் பிரேரணை இன்னும் நிறைவேறவில்லை என்றே பொருள்படும் என தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கிராமப் பகுதிகளிலுள்ள வட்டிக்கடை முதலாளி போன்றே சபாநாயகர் செயற்படுகின்றார். பிரதமரின் கைப்பாவையாக அவர் மாறியுள்ளார். கம்பீரமில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜே.வி.பி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது இதுபற்றி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க,
வாக்கெடுப்பின்போது செங்கோல் உரிய இடத்தில் இருக்கவில்லை. அது படைக்கள சேவிதரின் தோளிலேயே இருந்தது. இப்படி வாக்கெடுப்பு நடத்த முடியாது.
இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஆரம்பத்தில் வரிசை கிரமப்படியும் பின்னர் பெயர்கூவியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இடைநடுவில் அது கைவிடப்பட்டது.
வாக்கெடுப்பின் பின்னர் முடிவுகளை சபாநாயகர் அறிவிக்க வேண்டும். அதுவும் இங்கு நடைபெறவில்லை. எனவே, இந்த வர்த்தமானி அறிவித்தல் நிறைவேறவில்லை. அதை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் விவாதித்து நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.