வடக்கு மாகாணசபையானது தனது 100ஆவது அமர்வை 27.07.2017 அன்று நடத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் வடமாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது. நான்கு வருடங்களை நிறைவு செய்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன.
இதற்கிடையே வடக்கு மாகாணசபை சாதித்தவை என்ன? என்பதை சுருக்கமாக ஆராய வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. வடக்கு மாகாணசபை தொடர்பாக சிறு மீள்பார்வையையும் செய்ய வேண்டியது அவசியமாகும்.
விடுதலைப்புலிகளும், அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13அவது தீருத்தச் சட்டத்தின் ஊடான மாகாணசபை முறைமையை முற்றாக நிராகரித்திருந்தார்கள்.
மாகாணசபை முறைமையானது, ஆயுதப் போராட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய ‘தமிழீழம்’ எனும் உயர்ந்தபட்சத் தீர்வைக்கானும் போராட்டத்தின் கூர்மையை முறித்துவிடும் என்று விடுதலைப் புலிகள் கூறினார்கள். விடுதலைப் புலிகள் பெற்றுத் தருவதே உயர்ந்த தீர்வாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறினார்கள்.
2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தியபோது, அதை விடுதலைப் புலிகள் நிராகரித்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தேர்தலில் பங்கு கொள்ளக் கூடாது என்று தமது தீர்வில் உறுதியாக இருந்தார்கள்.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோல்வியடைந்த பின்னர்,2012ஆண்டு மீண்டும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றபோது,விடுதலைப் புலிகள் இருந்தவரை அவர்கள் கூறிவந்த நிலைப்பாட்டை பின்பற்றிய கூட்டமைப்பினர். விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாததால் அந்தத் தேரதலில் போட்டியிட்டனர்.
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தியதைப்போல் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலையும் நடத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்த நிலையில்,மாகாணசபைக்குரிய அதிகாரங்களில் சிலவற்றைக் குறைப்புச் செய்துவிட்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கே மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் திட்டமிட்டது.
அதற்குக் காரணம்,வேறு மாகாணங்களைப் போலல்லாமல் வடக்கு மாகாணசபையானது, பெரும்பான்மையாக தமிழர்களைக் கொண்ட மாகாணமாகும் ஆகவே அவர்களிடம் ஒரு நிர்வாக அதிகாரத்தை வழங்குவதற்கு முன்னர் அந்த அதிகாரத்தில் சிலவற்றை மத்திய அரசு வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மஹிந்த யோசித்து 13ஆவது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
மஹிந்த அத்தகைய முயற்சியை எடுத்தபோதும், மஹிந்த அரசாங்கத்தில் பங்காளியாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த டக்ளஸ் தேவானந்தா, மாகாணங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த ஆளுந்தரப்பிலிருந்த முற்போக்குச் சிந்தனையாளர்களை கலந்துபேசி,51 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, அதை மஹிந்தவிடம் கையளித்து, மாகாணசபைகளின் அதிகாரத்தை குறைப்புச் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும்,அத்தகைய திருத்தம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுமாக இருந்தால் அரசின் பங்காளிகளாக இருப்போரில் ஒரு பகுதியினர் அதை ஆதரிக்க மாட்டார்கள். அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை எடுத்துரைத்தார்.
இந்த முயற்சிகள் காதோடு காதாக நடந்து முடிந்தன. அந்த எதிர்ப்பைத் தொடர்ந்து மாகாணசபைகளின் அதிகாரத்தை குறைப்புச் செய்யும் மஹிந்த ராஜபக்சவின் முயற்சி கைவிடப்பட்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த மஹிந்த ராஜபக்ச சம்மதம் தெரிவித்தார்.
2013ஆண்டு செப்ரெம்பர் 21 ஆம் திகதி வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 30 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றிபெற்றார்கள்.ஈ.பி.டிபி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினராக போட்டியிட்டு 7 ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக தெரிவானது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தை பெற்றது.
கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்ற போது ஜென்ரல் சந்திரசிறி ஆளுனராக இருந்தார். அவரை மாற்றி சாதாரணமாக ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும் என்றும்,முதன்மைச் செயலாளராக இருந்த திருமதி விஜயலக்சுமியையும் மாற்றி வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார். இவர்கள் இருவரும் தமது சுதந்திரமான செயற்பாடுகளுக்கு தடையாகவும், ஒத்துழைக்காமலும் இருப்பதாகக் கூறப்பட்டது.
யுத்த அழிவுக்குப் பின்னர், எல்லாவகையிலும், சிதைந்து கிடந்த வடமாகாணத்திற்கு செலயக கட்டிடங்கள் தொடக்கம், சிற்றூழியர் நியமனங்கள்வரை ஆளுனர் சந்திரசிறி செய்துவந்தார். ஆளுனர் சந்திரசிறி இராணுவத்தில் ஜென்ரல் தரத்தில் இருந்தவர் என்பதால், வேலைகளைத் திட்டமிடுவதிலும், அதை அக்கறையோடு நேர காலத்திற்கு செய்து முடிப்பதிலும் அவரது காலத்தில் ஒரு ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும்வரை முதலமைச்சரின் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அக்காலங்களில் ஏற்கனவே ஆளுனர் சந்திரசிறி ஆரம்பித்த பணிகளை நிறைவு செய்து அதை பொது மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கும் காரிணங்களையே பெரும்பாலும் முதலமைச்சரும், மாகாண அமைச்சர்களும் செய்தனர். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும்,ஆளுனர் மற்றும் முதன்மைச் செயலாளர் மாற்றமும் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்று மாகாண நிர்வாகம் ஆளுனரின் கைகளிலிருந்து முதலமைச்சரின் கைகளுக்கு மாறியதும்,மாகாணசபையின் துரிதமான பணிகள் முடங்கத் தொடங்கின. அதற்கக் காரணம் மாகாணசபையை கூட்டமைப்பு வெற்றிகரமான நிர்வாக அலகாக நடத்துவதற்கு போட்டியிடவில்லை.
மாறாக வெற்றி வேறு நபர்களின் கைகளுக்கு போய்விடக் கூடாது என்பதும்,மாகாணசபையால் எதையும் எமது மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது. அது பிரயோசனமற்ற சபை என்றவிதமாக மக்களிடம் மாகாணசபையை வெளிப்படுத்த வேண்டும் என்ற திட்டங்களுக்கு அமைவாகவே மாகாணசபையை முடக்கும் நடவடிக்கையை முதலமைச்சர் கடைப்பிடிக்கின்றார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
அதற்குக் காரணம்,வருடா வருடம் மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு நிதி பயன்படுத்தப்படாமல் திறைசேரிக்கே திரும்பிச் சென்றதும்,செயற்படுத்துவதற்கு அதிகாரங்கள் இல்லை என்றும், முதன்மைச் செயலாளர் தமக்கு ஒத்துழைக்கின்றாரில்லை என்றும் முதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதியிலிருந்து மாகாணசபைக்கு உணவு வசதிகள் செய்யப்பட்டது. உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள், எரிபொருள் செலவுகள், அலுவலகம் மற்றும் வடகைக்கு வீடுகளை எடுத்தல்,போன்றவற்றுக்கான செலவுகளை அக்கறையோடு இவர்கள் செய்து வந்ததாக எதிர்க்கட்சி தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது.
ஆளுங்கட்சிக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்பதைக் காட்டுவதற்காக எண்ணிலடங்காததும், மாகாணசபையின் சட்டவரம்புக்கு உட்படாததும்,பல அர்த்தமற்றதுமான சுமார் 400 தீர்மானங்களை இதுவரை மாகாணசபையில் ஆளுந்தரப்பு நிறைவேற்றியுள்ளது.
வடக்கு மாகாணசபையில் ஆளுந்தரப்பினரே தமக்குள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாலும்,எதிர் வாதப் பிரதிவாதங்களை நடத்தியதாலும்,அதனால் சபை ஒத்திவைப்புகளும், வெளிநடப்புகளும் நடைபெற்றதாலும், எதிர்க்கட்சியினருக்கு வடக்கு மாகாணசபையில் ஒரு வேலையும் இருக்கவில்லை.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை நீண்டகாலமாக யுத்தத்திற்கு முகம் கொடுத்து உட்கட்டமைப்புகளையும், தொழில்துறைகளையும், இயல்பு வாழ்க்கையையும் இழந்த மாகாணமாகும். யுத்தத்தில் குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களும், அங்கங்களை இழந்தவர்களும்,பெற்றோரை இழந்து அநாதரவானவர்களும், பராமரிப்பற்ற வயோதிபர்களும்,புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு வாழ்வாதாரத்தை சமாளிக்க சமூகத்துடன் போராடுகின்றவர்களும்,படித்துவிட்டு வேலைவாய்ப்புக்களற்று இருப்பவர்களும், பல்வேறு காரணங்களால் முறையாக கல்வியைத் தொடர முடியாமல் சமூகத்தில் இருப்பவர்களும்,பூர்வீகமான தொழில்துறைகளை ஆரம்பிக்க வசதி வாய்ப்புக்கள் இல்லாதவர்களும்,புதிய தொழிற்துறைகளைத் தொடங்க உதவிகள் இல்லாதவர்களும் என்று திரும்பிய பக்கமெல்லாம் தேவைகளோடு எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் 75 வீதமேனும் மாகாணசபையினால் தீர்த்துவைக்க முடியும்.
மாகாணசபை செயற்திறணோடு செயற்பட்டு முயற்சி செய்திருந்தால், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எம்மவர்களையும், தொண்டு நிறுவனங்களையும் அணுகி தேவைக்கும் மேலதிகமான பொருளாதாரத்தை வடக்கு நோக்கிக் கொண்டுவந்திருக்க முடியும்.
முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தார், ஏனைய சில மாகாணசபை உறுப்பினர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார்கள். எல்லோரும் தமக்கு என்ன கிடைக்கும் என்றுதான் பார்த்தார்களே தவிர, மக்களுக்கு எதைப் பெற்றுக்கொண்டுவந்து கொடுக்கலாம் என்பதை சிந்திக்கவில்லை.
வடக்கு மாகாணசபையை நோக்கி வலிந்து வந்த பாரிய வரப்பிரசாதங்களையும் மாகாணசபையினர் அறிவுபூர்வமாக வரவேற்று நடைமுறைப்படுத்தவில்லை. உதாரணமாக இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் மற்றும் நீர்வழங்கள் திட்டத்திற்கு உலக வங்கி 24,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கித்தந்தது அதை பிராந்திய அரசியல் பேதம் பேசி ஓதுக்கினார்கள். வவுனியாவில் அமையவிருந்த பொருளாதார மத்திய நிலையத்தை இடம்தொடர்பான இழுபறியை நடத்தி எமது மக்களுக்கு பயனில்லாத தூரத்திற்கு தள்ளிவிட்டார்கள்.தொண்டு நிறுவனம் ஒன்று வவுனியாவில் பாரிய கரும்புச் செய்கைக்கு உத்தரவும், நிலமும் கேட்டது அதை தரகுப்பண இழுபறியினாலும், இடம் ஒதுக்கீடு செய்வதில் காட்டப்பட்ட அசமந்தப் போக்கினாலும் முதலீடு செய்யவந்த நிறுவனம் அதிருப்தியோடு திரும்பியது.
யாழ்ப்பாணத்தில் சேரும் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் மற்றும் பசளை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை செயற்படுத்தமுதலீட்டுடன் மாகாணசபையின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு புலம்பெயர்ந்த ஒருவரின் ஏற்பாட்டில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று முயற்சி செய்தது. அதுவும் தரகுப் பண சர்ச்சையால் கைவிடப்பட்டது.
லண்டன் மாநகருடன் ஒப்பந்தம் செய்து யாழ்ப்பாணம் நகரை புனரமைப்பாதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. கனடாவின் மார்க்கம் நகராட்;சியுடன் ஒப்பந்தம் செய்து முல்லைத்தீவு நகரை புனரமைப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வரவில்லை. ஒட்டிசுட்டானில் இந்திய அரசாங்கம் அமைத்துத் தருவதற்கு முன்வந்த தொழிற்பயிற்சி நிலையத்துக்கான முயற்சிகள் அக்கறையின்மையால் கைவிடப்பட்டது.
மருதங்கேணியில் அமைக்கப்படுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு,சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அரசாங்கத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட கடல் நீரை நன்னீராக மாற்றி யாழ். குடாநாட்டின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டம், மாகாணசபையின் பங்களிப்பும், ஊக்குவிப்பும் இல்லாமல் கைவிடப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றது.
வடமாகாணத்திற்கு வளம்சேர்க்கும் இவ்வாறான பல திட்டங்களையும், வாய்ப்புக்களையும்அக்கறையோடு செயற்படுத்தம் ஒருவராவது வராமாட்டார்களா? என்று வடமாகாண மண்ணும், மக்களும் ஏங்கிக் கிடக்கும் நிலையில் வடமாகாண சபையின் கணக்கில் பயன்படுத்தாமல், 144 மில்லியன் ரூபாய்கள் தேங்கிக் கிடக்கின்றது. அதுவும் விவசாயத்திற்காகவும், கூட்டுறவுக்காகவும் அதில் கூடுதலான பணத்தை செலவு செய்ய முடியும் என்று தெரியவருகின்றது.
இவ்வாறு வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்றவர்களின் செயற்பாடுகள், பெருமைக்குரியதாக இருக்கையில் மாகாணசபை அமைச்சர்கள் மீதான அதிகாரத்துஷ;பிரயோக குற்றச்சாட்டுக்கள், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள், அவற்றை விசாரிக்க விசாரணைக்குழு, அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி நீக்கம், தொடர் விசாரணைகள், முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஆளுனரிடம் கையளிப்பு,பின்னர் நம்பிக்கை இல்லாப் பிரேரணையை மீளப் பெறல்,புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு, உறுப்பினர்கள் சுழற்ச்சி முறையில் பதவி வகிப்பு என்று வடக்கு மாகாணசபையின் நாளாந்த நிர்வாகம் போய்க்கொண்டு இருக்கின்றது.
இப்போதும் சபையின் தலைவர் தொடர்பான சர்ச்சை நீரு பூத்த நெருப்பாக கணன்றுகொண்டே இருக்கின்றது. ஆளுங்கட்சியே இரண்டு அணிகளாகச் செயற்படுகின்றனர். முதலமைச்சர் மாகாணசபைக்கு மூன்றாவது மனிதனைப்போல் வந்துபோகின்றார். ஆளுங்கட்சி தமது கூட்டுப்பொறுப்பை இழந்துவிட்டுள்ளது.
புதிதாக அமைச்சர்களாக பதவி ஏற்றிருப்பவர்கள் மீதும் அதிகாரத் துஷ;பிரயோகம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தருணம் வரலாம் என்று ஆளுந்தரப்பே ஆருடம் கூறியபடி அதற்காக காத்திருக்கும் நிலைமையே மாகாணசபையில் நிலவுகின்றது.