மத்திய சீனாவின் உகான் நகரத்தைச் சேர்ந்த ஜூ நஜுவான் என்ற 59 வயது பெண், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். வயதான தோற்றத்தில் இருந்து இளம்பெண் தோற்றத்திற்கு மாறிய அவர் போலீசில் சிக்கியுள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஜூ நஜுவான் தனது சொந்த காரணங்களுக்காக 3.7 மில்லியன் டாலர் கடனாக பெற்றுள்ளார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கடனை திருப்பி தரும்படி உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார். அதன் பின்னரே அவர் முகத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பார். அவர் ஏற்கனவே அளித்த போட்டோவில் இருப்பதை விட இப்போது மிகவும் இளமையாக 30 வயது தோற்றத்தில் காட்சியளிக்கிறார்’ என தெரிவித்தார்.
மேலும் இப்பெண் மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி ரெயிலில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்காக, கடன் அட்டைகள் மூலம் கடன் பெற்றிருப்பதாகவும், அந்த தொகையைக்கூட செலுத்தவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் இதுபோன்று கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். ‘கிரிடிட் சொசைட்டி’ என்ற முறை அறிமுகப்படுத்திய பிறகு தான் இது போன்ற தவறுகள் நடைபெறுவதாக ஊடகஙகள் தெரிவிக்கின்றன.