அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் ஐந்து கி.மீ. தொலைவில் அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது.
இரண்டு அடிபீடத்தில், ஒன்பது அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இவர். அவருக்கு அருகில் செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அசோக வனத்தில் வேதனையில் தவித்த சீதாப்பிராட்டியின் முன் தோன்றிய ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து ஆறுதல் கூறினார்.
அதே விஸ்வரூபத்தில் இங்கே எழுந்தருளி இருப்பது இப்பகுதி மக்கள் செய்த தவப்பயன். ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு, வெண்ணெய், மலர், பழங்கள், செந்தூரம் மற்றும் பலவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதை பக்தர்கள் பார்த்து ஆனந்தம் அடைகின்றனர்.
ஆலயத்தின் அருகில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அதன் முன்பாக 23 அடி உயர கதாயுதம் நிறுவப்பட்டிருக்கிறது. மூலஸ்தானத்திற்கு முன்னால் செல்வவிநாயகர் தனி மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார்.
அவரை வணங்கியபின் ஆஞ்சநேயரின் முன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் அனுமனின் வெற்றிக் கொடிமரத்தைச் சுற்றி விட்டு மூலஸ்தானத்திற்குச் சென்று ஆஞ்சநேயரின் அருள் பெற வேண்டும். ஆஞ்சநேயரின் பேராற்றல் மிக்க கதாயுதத்தை வணங்கிய பின் அதை வலம் வரவேண்டும்.