கர்நாடக சிறை விதிகளை மீறி சிறப்புச் சலுகைகளை அனுபவித்ததாக அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக அளித்த அறிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று அம்மாநில காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ரூபா மொட்கில் தெரிவித்தார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் இன்று டிஐஜி ரூபா கூறுகையில், “பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பியே அங்கு ஆதாரங்களைத் திரட்டினேன்” என்றார்.
சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட வசதிகள், சிறை விதிகளுக்கு முரணானது என்பது அங்கு பணியாற்றிய குறிப்பிட்ட சில அலுவலர்களுக்கு தெரியும் என்றும், உயர்நிலைக்குழு விசாரணை முடிவில், அந்த உண்மை வெளிவரும் என்றும் ரூபா கூறினார்.
சிறப்புச் சலுகைகளை சசிகலா அனுபவித்தது பற்றி அவருக்கான தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றத்தில் யாராவது முறையீடு செய்தால், சசிகலாவின் செயலை மிக கடுமையானதாகக் கருதி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க வாய்ப்புள்ளது என்றார் ரூபா.
தனக்கு எதிரான புகார் குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி டிஜிபி சத்யநாராயணராவ் அளித்துள்ள நோட்டீஸ் குறித்து ரூபாவிடம் கேட்டதற்கு, அதற்கு சட்டப்படி பதில் அளிப்பேன் என்றும், இந்த விஷயத்தில் கடமையை மட்டுமே செய்துள்ளதால் யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று பதிலளித்தார்.