தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தான் குறிவைக்கப்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஏற்பட்ட சர்ச்சை குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது என கூறி பரபரப்பை கிளப்பினார்.
இதனையடுத்து தமிழக அமைச்சர்களுக்கு கமலுக்கும் வாய்வழி போர் நடந்து வருகிறது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கமல், ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறிவைக்கப்பட்டேன், அது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.
நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் எனக்கும் அக்கறை உண்டு.
கருத்து சொல்ல உரிமை உண்டு, அது பற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை, ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்.
நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை, நிபுணரை தேடுகிறார்கள், நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் எனக்கு நடிப்பு பற்றி தெரியும்.
இது போல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும்.
படிக்காதவராக இருந்தாலும் காமராஜர் தனி திறமை உள்ளவராக இருந்தார், சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் படிக்கவில்லை, என்றாலும் அவர்கள் எதில் இருந்தார்களோ அதில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள்.
இன்று அது போன்ற தலைவர்கள் இல்லை, எனவே தலைவர்களை தேடாமல் நிபுணர்கள் தேவை என்று தான் மக்கள் கருதுகிறார்கள், அது போன்ற நிலை உருவாக வேண்டும் என கூறியுள்ளார்.