கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பாக தகவல்கள் கசிந்துள்ளன.
வடமாகாண சபையில் இடம்பெற்ற குழப்பம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் மீது புதிய விசாரணை நடத்தி, அவர்கள் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் புதியவர்களை நியமிக்கவுள்ளதாகவும், முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் புளொட்டின் சிவனேசன் மற்றும் ரெலோவின் பரிந்துரையான விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக்கவுள்ளதாக முதலமைச்சர், சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மாற்றத்தை எல்லா கட்சிகளின் தலைவர்களுடனும் பேசியபின்னர் செய்யலாமென்றும், அவசரப்பட தேவையில்லையென்றும் இரா.சம்பந்தன் யோசனை தெரிவித்துள்ளார்.
டெனிஸ்வரனை பதவிநீக்கி புதியவரை நியமிக்குமாறு ரெலோ பரிந்துரை செய்துவிட்டதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
இந்த சமயத்தில், குறுக்கிட்ட சம்பந்தன்- தமிழரசுக்கட்சி ஆனோல்ட்டின் பெயரை சிபாரிசு செய்தும், அனந்தியை அமைச்சராக்கியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனோல்ட்டிற்கு ஒரு நியாயம், அனந்திக்கு ஒரு நியாயமா என்பதே அவரது கேள்வியின் சாரம். இதற்கு விளக்கமளித்த முதல்வர், மாகாணசபையில் தனக்கு எதிராக வேலைசெய்வதே ஆனோல்ட்டின் முழுநேர கட்சிப்பணியென்றும், உறுப்பினர்களை குழப்பி-விலைபேசி தனக்கு எதிராக திசைதிருப்பி மாகாணசபையையே செயலற்றதாக்க முயற்சிக்கிறார், நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டு என்னுடன் இணைந்து பணியாற்ற முடியாதென பகிரங்கமாக அறிவித்த ஒருவருடன் எப்படி பக்கத்திலிருந்து வேலை செய்வது? அமைச்சரவை வாரியத்தில் ஒத்துழைப்பாக செயற்படுவார் என எப்படி நம்புவதென கேள்வியெழுப்பினார்.
முதல்வரின் கேள்வியால் வாயடைத்து போன சம்பந்தன் மௌனமாக உட்கார்ந்திருந்தார். இந்த வாரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் இந்த விடயத்தை ஆராய்ந்து, அமைச்சரவை மாற்றத்தை செய்வதென இணக்கம் எட்டப்பட்டது.
ரெலோவின் உட்கட்சி போட்டிகளால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் தேர்வாகுவதற்கு வாய்ப்பில்லாத நிலைமைதான் உள்ளது. அதேவேளை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இன்னொரு அமைச்சரை நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரனும் விரும்பவில்லை. விந்தன் கனகரட்ணத்திற்கு அமைச்சு பதவி வழங்ககூடாதென ரெலோவின் ஒரு பகுதியினர் முதலமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் பதவியேற்ற அமைச்சர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள், முல்லைத்தீவிற்கு பிரதிநிதித்துவம் இல்லையென்ற சர்ச்சைகள் இந்த சமயத்தில் எழுந்ததையடுத்து, போக்குவரத்து அமைச்சை முல்லைத்தீவிற்கு வழங்க முதலமைச்சர் முடிவுசெய்திருந்தார்.
முல்லைத்தீவு அல்லது மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரின் பெயரை சிபாரிசு செய்யுமாறு ரெலோ தலைமையிடம் முதலமைச்சர் கேட்டிருந்தார்.
எனினும், முல்லைத்தீவை சேர்ந்த புவனேஸ்வரன், மன்னாரை சேர்ந்த குணசீலன் ஆகியோரை அமைச்சராக்க கட்சி தலைமை ஆர்வம் காட்டவில்லையென தெரிகிறது.
ரெலோவின் இந்த சிக்கலான நிலைமையையடுத்து, முதலமைச்சர் புதிய யோசனையொன்றை ரெலோ, புளொட் கட்சிகளின் தலைவர்களிடம் வைத்தார். முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் புளொட் அமைப்பின் க.சிவனேசனை போக்குவரத்து அமைச்சராக நியமித்துத்து, சுகாதார அமைச்சில் ஓரிரண்டு மாதத்தில் மாற்றம் செய்து, அதை ரெலோவிடம் வழங்கலாமென்று முதலமைச்சர் யோசனை முன்வைத்துள்ளார். எனினும், தமது பரிந்துரையில் மாற்றத்தை செய்ய ரெலோ விரும்பவில்லை.