கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் மே இரண்டாம் வாரம் என்றாலே நினைவிற்கு வருவது அனைவரது மனதில் இருந்தும் நீங்காத வடுவாக காணப்படும் இரண்டு கறுப்பு நிகழ்வுகள் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை ஒன்று புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை மற்றொன்று.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆயுதம் கொண்டு அழிக்கப்பட்ட தமிழ் இனம் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் போதைப்பொருளால் அழிக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு சிறந்த சான்றாக வித்தியாவின் படுகொலையை பார்க்க முடியும்.
இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு மே 13 திகதி இடம்பெற்ற புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தற்பொழுது வரை அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது.
இந்த பெயர் எத்தனை உள்ளங்களில் வேதனையை தோற்றிவித்துள்ளது. இன வன்முறைகள், ஆயுத கலாச்சாரங்கள், உரிமை மீறல்கள் என்பதையும் தாண்டி உலகத்திலுள்ள மனிதம் கொண்ட மனிதர்களை ஒரு கணம் திரும்பிப்பார்க்க வைத்த பெயர்தான் வித்தியா.
மே 13 அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியுமா?? பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற எண்ணற்ற கனவுகளோடு தனது பயணத்தை ஆரம்பித்த ஒரு மொட்டு கசக்கி எறியப்பட்ட கரி நாளை எவராலும் மறக்க முடியாது.
2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி மாலை பாடசாலை சென்ற தனது அன்பு மகளை காணவில்லை, தனது ஆருயிர் சகோதரியை காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டது.
தனது மகள் திரும்ப தனக்கு கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை பெருமூச்சில் பல்வேறு ஏக்கங்களுக்கு மத்தியில் தாயொருவர் அந்த முறைப்பாட்டை பதிவுசெய்திருந்தார்.
எனினும் மறுநாள் அந்த தாயிற்கு கிடைத்த செய்தி யாராலும் ஜீரணிக்க முடியாதவை. தனது உயிர் ஒன்று, நயவஞ்சகர்கள் கூட்டத்தால் கசக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, படுகொலை செய்யப்படுவாள் என்பதை கொஞ்சமேனும் சிந்தித்திராத அந்த தாயின் நம்பிக்கை தூக்கி எறியப்பட்டது.
கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்திலுள்ள பற்றைக் காட்டில் கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொடூரச் சம்பவம் இலங்கை மாத்திரமன்றி சர்வதேசத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.
பாடசாலை சென்ற தனது மகள் வித்தியாவை காணவில்லை என குடும்ப உறுப்பினர்களால் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது தொடக்கம் இன்று வரை வித்தியா தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கின் போக்கு, சமூக போக்கு என்பன ஒரே பார்வையில்…
வித்தியாவின் கொலை வழக்கு
மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட செய்தி தீயாய் பரவியதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு யுத்தக்களமாக மாறியது வடமாகாணம்…
புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மாணவர்கள் வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் போராட்டங்கள் வெடித்ததுடன், பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தொடர்ச்சியாக வடமாகாணம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, பல கைதுகளும் இடம்பெற்றன.
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தினத்திற்கு மறுதினம் 2015 மே மாதம் 14 ஆம் திகதி வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் அவசரக் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
புங்குடுதீவில் உயர்தரம் படிக்கும் மாணவி துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினரால் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அத்தோடு, வித்தியா படுகொலை செய்யப்பட்ட அந்த இடத்தில் ஊர்காவற்துறை பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து 2015 மே மாதம் 15ஆம் திகதி வித்தியாவின் கோரப்படுகொலைக்கு காரணமான கொடியவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் சுவிஸ்கரன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்
அதே தினத்தன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கிளிநொச்சியை சேர்ந்த பல்வேறு பாடசாலைகளின் மாணவர்கள் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.
மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையான கண்டனம் வெளியிட்டிருந்தது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர் பெண்கள் முதியோர் நலன்பேண் மையத்தின் தலைவி ரஜனிதேவி குறித்த கண்டன அறிக்கையை விடுத்திருந்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அன்றைய தினம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரவி, செந்தில், மற்றும் சின்னாம்பி ஆகியவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது நீதிமன்றத்தில் வித்தியாவின் கொலைக்கு குடும்ப பகையே காரணம் என பொலிஸார் அறிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மறுதினம் 2015 மே மாதம் 16ஆம் திகதி எமது உடன்பிறவா சகோதரி வித்தியா கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி காட்டமான கண்டன அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. தொடர்ந்து கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இந்த சம்பவம் தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
2015 மே 17ஆம் திகதி வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறிகட்டுவான் உபபொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அவர்களை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை தாக்கி முற்றுகையிட்டனர்.
பொதுமக்களுக்கு அஞ்சி சந்தேக நபர்களை யாழ்ப்பாணத்துக்கு கடல்வழியாக பொலிஸார் கொண்டுசென்றனர்.
2015 மே 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீடுகளை பொது மக்கள் அடித்து நொருக்கி தீ வைத்தனர். தொடர்ந்து கைதான சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.
அன்றைய தினமே வித்தியா கொலை வழக்கின் 9ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
2015 மே மாதம் 19 ஆம் திகதி வித்தியாவின் படுகொலை வழக்கில் மூத்த சட்டத்தரணி கே.வி. தவராஜா முன்னிலையாகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.
மேலும் கைதானவர்களை தப்பிக்கவைக்க பொலிஸாரும் வழக்கறிஞர் ஒருவரும் செயற்படுவதாக வித்தியாவின் சகோதரன் நிஷாந்தன் தெரிவித்திருந்தார்.
ஒரு தமிழனாக இருந்து புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் வெட்கி தலைகுனிகின்றேன் என அமைச்சர் மனோ கணேசனின் அறிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
2015 மே 20ஆம் திகதி கொழும்பில் அடுத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாததால் யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்படுகின்றது.
அதே தினத்தில் வித்தியா கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்பு குழுவொன்று யாழ். புங்குடுதீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவி வித்தியாவின் படுகொலைக்கு காரணமான கொலையாளிகளுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அன்றைய (2015.05.21) அறிக்கை இன்று எம் மத்தியில் கேள்விக்குள்ளாகியுள்ளது.