கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை தற்போது நூலகங்கள் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று புதுமொழியாக மாற்றலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் கிளை நூலக திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு நூலகம் அப் பகுதியில் உள்ள மக்களுக்கு அவர்களின் வயது, தொழில் வேறுபாடின்றி அனைவருக்கும் நன்மை பயக்க வல்லது.
அன்றாட நாட்டு நடப்புக்கள், உலக விவகாரங்கள், அறிவியல் ரீதியான செய்திகள், கற்பனைக் கதைகள், விகடத் துணுக்குகள் என அனைத்து விதமான விடயங்களையும் பத்திரிகைகளில் வாசித்து அறிந்து கொள்வதற்கு நூலகம் உதவி அளிக்கின்றது.
கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு பண்பட்ட எமது சமூகம் இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றது. சமூகப் பழக்கவழக்கங்கள் குன்றியவர்களாக போதைப் பொருள், கலாச்சார சீரழிவு ஆகியவை மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது எமக்கு மிகுந்த வேதனை அளிக்க வேண்டும்.
கட்டுப்பாடுகள் மிகுந்த காலத்திலும், வட பகுதியானது அடிப்படை வசதிகள், மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகிய வசதிகள் அற்ற நிலையிலும் கல்வியில் மிகவும் சிறந்த நிலையில் நின்று முதலாவது இடத்தைப் பெற்றிருந்தமை இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூரப்படல் வேண்டும்.
எங்கள் குழந்தைகள் கல்வி கற்கின்றார்கள். இவற்றையும் மீறி ஒரு சில பிள்ளைகள் கல்வியில் ஆர்வமாக இருக்கின்றார்கள் என்று கண்டால் அவர்களையும் குழப்புவதற்கு விதம் விதமான கையடக்கத் தொலைபேசிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
வீதியில் செல்கின்ற பிள்ளைகள் சித்த சுவாதீனம் அற்றவர்களோ என சந்தேகிக்கப்படக் கூடிய வகையில் அவர்கள் தனியே சிரிப்பது போலவும், தம்முடன் தாமே கதைத்துக் கொண்டு செல்வது போலவும், எமக்குத் தோற்றமளிக்கின்றார்கள். உற்றுப் பார்த்தால் காதுக்குள் சிறிய ரக தொலைபேசி.
அதுவும் போதாதென்று நவீன ரக செல்பி எடுக்கப் போய் அருமந்த உயிர்கள் பல புகையிரத தண்டவாளங்களிலும் கடற்கரையிலும் ஆற்றிலும் வீழ்ந்து தொலைந்து போயுள்ளார்கள்.
வளர்ச்சியடைந்த நாடுகள் மனித வலுவின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நவீனரக மின்னியல் சாதனங்களை கண்டுபிடித்தனர்.
எம்மைப் போன்ற வளர்முக நாடுகளில் வசிக்கின்ற மக்களோ தங்கள் முழுநேரத்தையும் மழுங்கடிக்கச் செய்துள்ளார்கள் இந்தச் சாதனங்கள் மூலம். அவர்களைக் கல்வி-கேள்வி அறிவுகளில் இருந்து தூரத் தள்ளிவிட்டுள்ளன இந்தச் சாதனங்கள்.
கலாச்சார சீரழிவுகள், தீய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தக்க வகையில் இச் சாதனங்கள் மாறிவிட்டன. அதன் விளைவு கல்வி கேள்வி அறிவுகளில் வடமாகாணம் 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
எனவே எமது இளைய தலைமுறை சரியான பாதையில் பயணிப்பதற்கான அனைத்து உதவி ஒத்தாசைகளையும் வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு எம்மத்தியில் காணப்படுகின்றது.
பிள்ளைகள் கூடுதலான நேரம் தொலைபேசியில் தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பெற்றோரும் மற்றோரும் இதற்கு உதவி புரிய வேண்டும்.
அவ்வாறு ஆர்வம் வந்துவிட்டால் நீங்கள் கல்வியில் சிறந்தவர்களாக மாறுவதற்கு இவ் வாசிப்புப் பழக்கம் உதவியாக அமையும்.
ஒருவரின் புதல்வி தினமும் புத்தகங்களை வாசித்த படியே காணப்பட்டார். அவரது கையில் ஒரு புத்தகம் இல்லாத சந்தர்ப்பத்தை ஒரு போதும் காணமுடியாது.
அவரின் தாயார் வற்புறுத்தி சிறிது நேரம் கதைப் புத்தகத்தை படி அல்லது டி.வியைப் பார் எனக் கூறினாலும் அவர் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்று எங்கோ ஒரு மறைவில் அமர்ந்திருந்து படித்துக் கொண்டிருப்பார்.
அவர் இன்று ஒரு பொறியியலாளராக முன்னணி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுகின்றார் என்று கேள்விப்படுகின்றேன். கண்டதும் கற்றுப் பண்டிதர் ஆனோர் பலரை நாம் சந்தித்திருக்கின்றோம். இளமையில் கற்பதே இனிய வாழ்க்கைக்கு வித்திடும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.