“யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்பொழுது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் காணொளி ஒன்று சமூக வளைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை இவர் மீட்டெடுப்பது போன்ற காணொளியே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன?” பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகரவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,
“இந்த கொலை சம்பவம் தொடர்பாக யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன.
இந்த வழக்கிலேயே இது தொடர்பான விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பில் எமக்கு எதுவும் கூறுவதற்கில்லை.
நீதிமன்றம் இது தொடர்பில் எமக்கு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அந்த உத்தரவுக்கு அமைவாக நாம் செயற்படுவோம்.” என குறிப்பிட்டார்.
மேலும், பொலிஸ் அதிகாரிகளுக்கு தெற்கிலிருந்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அச்சுறுத்தலை விடுப்பதற்கு காரணமான சந்தேகநபர் இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
சட்ட ரீதியிலேயயே விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.