வடகொரியாவிற்கு எதிராக கண்டனம் வெளியிட்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏவுகணை பரிசோதனைகளை கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதுவும் தெரியாது.
இந்த அறிக்கை வெளியானதன் பின்னர் ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
“சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வடகொரியா மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சருக்கும் தெரியவில்லை.
எனவே இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.