ஓரறிவு உள்ள உயிரினமோ, ஆறறிவு படைத்த மனிதனோ யாரையும் காதல் விட்டு வைத்ததில்லை. புராண காலத்திலேயே காதல் பகடைகள் உருட்டப்பட்டிருக்கின்றன. பல சாம்ராஜ்யங்களும் காதலால் சரிந்துபோன சரித்திரங்களை நாமறிவோம்.
காதலிக்காக காத்திருக்கும் நெடுநேரங்களால் ஏற்படும் கோபம், அவளைக் கண்டதும், காணாமல் போய் ஒருவித படபடப்பு உண்டாகும் பாருங்கள்… அடடே, அதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.
அப்படி என்ன இருக்கிறது அந்த மூன்றெழுத்தில்?
அறிவியல் ரீதியாக ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், ஜோதிடம் சொல்வதோ வேறு.
சுக்கிரன், செவ்வாய், சந்திரன், சனி ஆகிய நால்வருமே காதலிக்க கற்றுத்தருவதில் முக்கியமானவர்கள். இது மட்டுமா? இலவச இணைப்பாக வீட்டைவிட்டு ஓடிப்போவதில் இவர்கள் பங்கு முக்கியமானது. அலைபாயுதே ஸ்டைல் திருமணமும் தங்களது தலைமையிலேயே நடத்தி வைப்பார்கள்.
ஜெனன கால ஜாதகத்தில் 1, 5, 7, 9 –ம் இடங்களும் காதலுக்கு முக்கியமானவை. இதன் அதிபதிகள் ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்படுவது காதலை தரும்.
முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், சுக்கிரனே காதல் துறைக்கு தலைவர். கையில் காம பானத்தோடு தயார் நிலையில் இருப்பார். எவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் என்கிற வலுவான நிலையிலும், பிற கிரகச்சேர்க்கையின் பொழுதும், அவர்கள் மீது பானம் பாயும். அப்புறமென்ன… ‘காதல் வைபோகமே’ என மரத்தை சுற்றி டூயட் தான்.
இவ்விஷயத்தில் செவ்வாய் சற்றே வில்லங்கமானவர். உடல் உஷ்ணமும், ரத்தமும் இவருடைய கட்டுப்பாட்டில் வருகிறது. சுக்கிரனுடன் இவர் சம்மந்தப்பட்டால் காதல் காமமாக கன்வெர்ட் ஆகிவிடும்.
‘என் மனசை பறிகொடுத்திட்டேன்’ என்று காதலர்கள் அடிக்கடி சொல்வார்களே, அந்த மனதிற்கு அதிபதி சந்திரனே. இவர் பாவ கிரக சேர்க்கை பெறாமல், சுப கிரகங்களின் பார்வையில், சேர்க்கையில் இருப்பது நல்லது. இல்லையென்றால் ‘மன்னிச்சுக்க, எங்க வீட்டில ஒத்துக்கலை…’ என்று காரியம் முடிந்ததும் கழற்றிவிடும் ஆசாமியாக இருப்பார்கள்.
காதலுக்கு எது முக்கியமோ இல்லையோ, துணிச்சல் ரொம்பவே முக்கியம். பீச், பார்க், ஷாப்பிங் மால் என சுற்றுவதற்கும், பெற்றோரை தூக்கிப்போடுவதற்கும் தேவையான துணிச்சலை சப்ளை செய்பவர் சனிபகவான். காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அதற்கு அடித்தளம் போடுபவரும் இவரே.
இதுமட்டுமில்லாமல் காதலிக்கும் யோகம் இருந்து ராகு, கேதுக்களின் சம்மந்தம் ராசியிலோ அம்சத்திலோ இருக்குமானால், வாழ்க்கைத்துணை அந்நிய மதத்தினராகவோ அல்லது அயல் நாட்டை சேர்ந்தவராகவோ இருப்பார்.
காதலுக்கு என்ன மாதிரியான கிரகச் சேர்க்கைகள் இருக்கவேண்டும் என்பதை காண்பதற்கு முன்னால், சம்மந்தப்பட்ட பாவங்களை பார்த்துவிடுவோம்.
லக்கினம் என்றழைக்கப்படும் முதலாம் பாவத்தை பொறுத்தே நமது குணாதிசயங்கள் முடிவு செய்யப்படுகின்றன. ஆகையால் எந்த ஒரு விஷயத்திற்கும் லக்கினம் மிக முக்கியம்.
ஒருவர் காதலில் வழுக்கி விழுந்தாரா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஐந்தாம் பாவம் மூலமே.
ஏழாம் பாவத்தைக்கொண்டு வாழ்க்கைத்துணையை பற்றி அறிந்துகொள்ள முடியும். அவர் படித்தவரா, வசதியானவரா, குணாதிசயங்கள் தான் என்ன? என்கிற கேள்விக்கெல்லாம் விடை கிடைப்பது இங்கே தான்.
இதனுடன் ஒன்பதாம் பாவத்தையும் பார்க்கவேண்டும். சமுதாய கட்டுப்பாடுகளை மதிப்பவரா, மீறுபவரா என்பது போன்ற விஷயங்கள் இங்கிருந்தே வெளிவரும்.
இப்பொழுது கட்டுரையின் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டோம். இதில் கூறப்படுவது போன்ற கிரகநிலைகள் இருந்தால் காதலில் தொபுக்கடீர் என்று குதித்து நீங்கள் நீந்தப்போவது உறுதி.
லக்கினம் அல்லது ராசிக்கு 1, 5, 7, 9 ம் அதிபதிகள் சம்மந்தம் பெறவேண்டும். இது இணைவாகவே, பார்வையாகவே, பரிவர்த்தனையாகவோ, சார பரிவர்த்தனையாகவோ இருக்கலாம்.
1, 5 அல்லது 5, 7 அல்லது 7, 9 அல்லது 1, 7 அல்லது 1, 5, 7 சம்மந்தம்.
ஏழாம் அதிபதியோடு சுக்கிரன், செவ்வாய், சனி இணைவு அல்லது பார்வை.
சுக்கிரன், சனி, செவ்வாய் இணைவு.
சுக்கிரன், ராகு சம்மந்தம்.
ஒன்பதாம் பாவம், அதன் அதிபதி, குரு பாதிக்கப்பட்டிருந்தால் காதல் கலப்பு மணமாக முடியும்.
ராகு முஸ்லீம் மதத்தையும், கேது கிருத்துவ மதத்தையும் குறிப்பவர். இவர்கள் 5, 7ம் அதிபதிகளோடு இணைந்திருப்பது, சுக்கிரனோடு சேர்வது போன்ற கிரக நிலைகள் மேற்சொன்ன மதத்தினரை வாழ்கைத்துணையாக அமைய வைக்கும்.
காதலுக்கான கிரக நிலைகளோடு 4 ம் அதிபதி சம்மந்தப்பட்டால், அக்காதல் கல்லூரியிலேயே ஆரம்பமாகியிருக்கும். 9, 10ம் அதிபதிகள் சம்மந்தம் ஏற்பட்டால், பணிபுரியும் இடத்தில் துளிர் விட்டிருக்கும்.
என்னங்க… படிச்சிட்டீங்களா? உங்க ஜாதகத்தை எடுத்து இந்த கிரக நிலைகள் இருக்குதான்னு பாருங்க. இருந்தால் ஊரைக்கூட்டி மேடை போட்டு ஐ லவ் யூ சொல்லி காதலை கன்டின்யூ பண்ணுங்க. வாழ்த்துக்கள்!