துவாரகாமாயியை கண் குளிரப்பார்த்து, ஆத்மார்த்தமாக தரிசனம் செய்து முடித்த பிறகு நாம் செல்ல வேண்டிய இடம் சாவடி ஆகும். துவாரகாமாயியில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் சாவடி இருக்கிறது. இரண்டே நடையில் சாவடிக்கு சென்றடைந்து விடலாம். சாவடி என்றால் பொது மக்கள் சந்தித்து கூடி பேசும் இடமாகும். அதாவது ஊர் சங்க கூட்டங்கள் அங்குதான் நடைபெறும்.
மேலும் வழிப் போக்கர்கள் தங்குவதற்கும் அந்த சாவடி பயன்படுத்தப்பட்டது. அந்த சாவடி மிகப்பெரிய கட்டிடம் அல்ல. இரண்டு அறைகள் ஒரு வராண்டா மாதிரியான சிறு அறை அமைப்பில் உள்ளன.
துவாரகாமாயி மசூதி பழுதடைந்த காரணத்தாலும், மண் கட்டிடம் என்பதால் மழை நேரத்தில் தண்ணீர் ஒழுகிய காரணத்தாலும், அங்கு தங்க முடியாத நிலை இருந்தது. மசூதி தரையும் மண் தரையாக இருந்ததால் மழை காலத்தில் அங்கு தரையில் தூங்க முடியாத நிலை காணப்பட்டது. பலத்த மழை பெய்யும் போது மசூதி உள்ளே தண்ணீர் தேங்கி விடும். பாபா நிற்க கூட இடம் இருக்காது. இதனால் பாபாவை அவரது பக்தர்கள் சாவடியில் வந்து தங்குமாறு கூறினார்கள். ஆனால் துவாரகாமாயில் இருந்து வெளியேற பாபாவுக்கு விருப்பம் இல்லை.
நீங்கள் அங்கு சென்று தங்கிக் கொள்ளுங்கள் நான் சாவடிக்கு வர மாட்டேன் என்றார். ஆனாலும் பாபா பக்தர்கள் விடவில்லை. பாபாவை வற்புறுத்தி சாவடிக்கு அழைத்து சென்று விட்டனர். இதையடுத்து பாபா சாவடியில் இரவில் தங்கி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ஒருநாள் சாவடியிலும், மறுநாள் துவாரகாமாயியிலும் தூங்கும் பழக்கத்தை பாபா ஏற்படுத்தினார். ஒரு அறையில் பாபாவும் மற்றொரு அறையில் பக்தர்களும் படுத்துத் தூங்கினார்கள்.
இதன் காரணமாக துவாரகாமாயிக்கு கிடைத்த அதே மகிமை, மதிப்பு, மரியாதை எல்லாம் சாவடிக்கும் கிடைத்தது. சாவடிக்குள் வலது பக்க அறையில் பாபா தூங்கினார். பாபா தெய்வமானதும், சீரடியில் அவர் பாதம் பட்ட இடங்கள் எல்லாம், எப்படி புண்ணிய பூமியாக மாறியதோ, அது போல சாவடியும் புனிதப் பகுதியாக மாறியது.
நாளடைவில் சாவடிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், அந்த சிறிய இடம் சீரமைத்து சற்று பெரிதாக்கப்பட்டது. பாபரே சின்ன சினிகர் என்ற பாபா பக்தர் தன் சொத்துக்களை எல்லாம் சீரடி தலத்துக்காக எழுதி வைத்து விட்டார். அந்த சொத்து வருவாயில் இருந்து கிடைத்த பணம் மூலம் சாவடியில் பளிங்கு கற்கள் பதித்து அழகுபடுத்தி உள்ளனர்.
சாவடிக்குள் பாபா பயன்படுத்திய பலகை, நாற்காலி, சக்கர நாற்காலி மற்றும் பல்லக்கு வைக்கப்பட்டுள்ளன. பாபா தெய்வமானதும், அவரது உடல் கிடத்தப்பட்டிருந்த பலகையும், சாவடியில் வைக்கப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பலகையை மியூசியத்துக்கு மாற்றி விட்டனர். சாவடியில் பாபாபடுத்து உறங்கிய அறைக்குள் செல்ல ஏனோ பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த காரணத்தால் சாவடிக்குள் ஆண்களும், பெண்களும் மொத்தமாக செல்ல முடியாது. சாவடியின் வலது பகுதியில் ஆண்களும் இடது பக்க பகுதியில் பெண் களும் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பாபா தூங்கிய வலது பக்க அறை பகுதியை மிக, மிக புனிதமான இடமாக கருதி பாதுகாத்து வருகிறார்கள். பாபாவுக்கு காலையிலும், மாலையிலும் அந்த அறையில் வைத்துதான் ஆரத்தி எடுக்கப்பட்டது. எனவே அந்த அறையில் பாபாவின் அருளாற்றல் மிகுந்து இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஆண்கள், பெண்கள் தரிசனத்துக்காக தனிதனியே பிரிக்கப்பட்டுள்ள சாவடியில் இரு பாலரும் வணங்க பாபா படம் வைக்கப் பட்டுள்ளது. பாபாவை வணங்கி முடித்ததும், பலர் அங்கு சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்வதுண்டு.
உங்கள் வேண்டுதல்கள் உடனே நிறைவேற வேண்டுமானால், சாவடியில் இந்த குறிப்பிட்ட இடத்தில் தியானம் இருப்பது நல்லது. பாபா உயிருடன் இருக்கும் போது, துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு அவரை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மேள, தாளம் முழங்க அழைத்து செல்வார்கள். சில சமயம் பாபாவை வாணவேடிக்கை, பஜனை பாடல்கள் பாடியபடி அழைத்து செல்வார்கள்.
பாபா வளர்த்த சியாம் சுந்தர் எனும் குதிரை அவர் படத்தை முதுகில் சுமந்து செல்லும். அதன் பின்னால் பாபா நடந்து செல்வார். அப்போது பட்டு துணியில் செய்யப்பட்ட பல வண்ண குடையை பாபாவுக்கு பிடித்து வருவார்கள்.
இந்த ஆடம்பரத்தை முதலில் பாபா மிகவும் வெறுத்தார். எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார். ஆனால் பாபா மீது கொண்ட அபரிதமான பாசம் காரணமாக பக்தர்கள் யாரும் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
ஒரு கட்டத்துக்குப் பிறகு பாபாவால் தன் பக்தர்கள் மேற்கொண்ட பட ஊர்வலத்தை நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு பாபாவை பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அழைத்து செல்வது ஒரு சாம்பிரதாயமாகவே மாறிப்போனது.
சாவடியில் பாபா சுமார் 20 ஆண்டுகள் வசித்ததாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் கடைசி 9 ஆண்டுகள் “சாவடி ஊர்வலம்“ எனும் ஊர்வலம் நடந்தது. அதாவது 1909-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி இந்த ஊர்வலம் பழக்கம் தொடங்கியது.இந்த பழக்கத்தை சாய்பாபாவின் பக்தர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள். குறிப்பாக பாபாவின் தீவிர பக்தரான ராதாகிருஷ்ணன் ஆயி என்பவர் பாபாவை மகாராஜா போல நடத்தினார். மற்ற பக்தர்கள் அதை பின்பற்றத் தொடங்கினார்கள்.
தன்னை மகாராஜா போல நடத்துவதை முதலில் பாபா விரும்பவில்லை. ஆனால் உண்மையான பக்தர்களின் அன்புக்கு பாபா கட்டுப்பட வேண்டியதாகி விட்டது. இதனால் நாளடைவில் சீரடியில் சாவடி ஊர்வலம் புனித சடங்கு போல, அதே சமயத்தில் மிக, மிக கோலாகலமாக நடந்தது.
மசூதியில் இருந்து சாவடிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் பாபா புறப்படும் முன்பு பக்தர்கள் அனைவரும் மசூதி அருகில் வாத்தியக் கருவிகளுடன் திரள்வார்கள்.
சிலர் தீவட்டிகளை ஏந்தி நிற்பார்கள். பாபாவின் பல்லக்கு அழகு படுத்தப்படும். ஊர்வலத்தின் முன் பகுதியில் செல்லும் சியாம் குதிரையும் அலங்கரிக்கப்படும்.
ஊர்வலத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரான பிறகு பாபாவின் பக்தராக மட்டுமின்றி நண்பராகவும் திகழ்ந்த தாத்யா பாட்டீல் பாபாவிடம் சென்று தயாராகும்படி கூறுவார். உடனே பாபா தனது கப்னி உடையை எடுத்து அணிந்து கொள்வார்.
புகை பிடிக்கும் மண் குழாயை எடுத்துக் கொண்டு புறப்படுவார். அவர் மீது பூவேலை பாடுகள் கொண்ட பூ சால்வை போடப்படும். மசூதியில் இருந்து பாபா வெளியில் வந்ததும் சங்குகள் முழங்கும். மேள-தாளங்கள் இசைக்கப்படும். பக்தர்கள் பாபாவை சூழ்ந்து கொண்டு சாமரம் வீசுவார்கள். பாபாவை புகழும் கீர்த்தனைகளை ஆண்களும், பெண்களும் பாடுவார்கள்.
மசூதியில் இருந்து சாவடி வரை பாபா நடந்து செல்ல அலங்கார துணி விரிக்கப்பட்டிருக்கும். பாபா தனக்காக உருவாக்கப்பட்ட பல்லக்கில் ஏறுவதே இல்லை என்பதால், அதில் அவரது பாதுகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
பாபா சாவடி நோக்கி நடக்கத் தொடங்கியதும், பட்டாசுகள் வெடிக்கப்படும். வாண வேடிக்கைகளும், மத்தாப்புகளும் கண்கவர் வகையில் கொளுத்தப்படும்.
பாபாவின் இடது கையை தாத்யா பாட்டீல், வலது கையை மகல்சாபதி இருவரும் பிடித்து கொள்ள பாபா நடக்கத் தொடங்குவார். பக்தர் ஜோக் குடை பிடித்து வருவார். பாபாவுக்கு பின்னால் அணிவகுத்து வரும் பக்தர்கள், “ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத் மகாராஜ் கீ ஜெய்” என்று கோஷமிடுவார்கள்.
உண்மையிலேயே ஒரு நாட்டின் மகா ராஜாவை அழைத்து செல்வது போல பாபாவை பக்தர்கள் ஆட்டமும், பாட்டமுமாக அழைத்து செல்வார்கள். அந்த சமயத்தில் பாபா சாகேப் தீட்சித், வண்ண மலர்களை பாபா மீது தூவியபடி வருவார். சாவடியை நெருங்கியதும் அனுமன் கோவில் தெரியும். அந்த இடத்தில் மட்டும் பாபா சிறிது நேரம் சென்று ஏதோ மந்திரங்களை முணுமுணுப்பார். கையை மேலும் கீழும் ஆட்டியபடி நிற்பார். பிறகு சாவடிக்கு செல்வார்.
பாபாவின் வருகையை எதிர்பார்த்து சாவடி அலங்கரிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அங்குள்ள ஆசனத்தில் பாபா அமர்ந்ததும் அவருக்கு பக்தர்கள் கிரீடம் அணிவித்து பூ மாலைகளை சூடுவார்கள். பாபாவின் பாதங்கள் வெள்ளிப் பாத்திரத்தில் கொண்டு வரப்படும் தண்ணீர் மூலம் கழுவி பூஜிக்கப்படும். ஆனால் இதையெல்லாம் பாபா கண்டு கொள்ளவே மாட்டார். பக்தர்கள் திருப்திக்காக அமைதி யாக இருப்பார்.
அனைத்து ஆட்டம், பாட்டம் முடிந்து, பக்தர்கள் புறப்பட்டு சென்றதும், பாபா தாமே படுக்கையை சரி செய்து தூங்கச் சென்று விடுவார். 1918-ம் ஆண்டு பாபா மகாசமாதி அடையும் வரை இந்த பழக்கம் தொடர்ந்து நடந்தது. பாபா மறை தெய்வமான பிறகும், இந்த பழக்கம் நின்று விடவில்லை. பாபா படத்தை மலர்களால் அலங்கரித்து, பாபாவை புகழ்ந்து பாடும் பாடல்களை பாடியபடி சென்றனர். நாளடைவில் வியாழன் தோறும் இந்த பழக்கம் நடைமுறைக்கு வந்தது.
இப்போதும் சீரடியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபா படம் அலங்கரிக்கப்பட்டு துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள சாய்பாபா கோவில்களில் வியாழன் தோறும் பாபா பட ஊர்வலம் நடத்தப்படுகிறது. சாவடியில் பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் குருஸ்தான், லென்டி தோட்டத்தையும் நாம் காண வேண்டும். அந்த இடங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதை அடுத்த வாரம் (வியாழக்கிழமை) பார்க்கலாம்.