உங்களுக்கு ராகு பகவான் கடக ராசிக்கும், கேது பகவான் மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இந்த பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்துக்கும் கேதுபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்துக்கும் வருகிறார்கள். இப்போது ராகு-கேதுவின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம்.
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து மிக நன்மையான பலன்களை கொடுக்கப் போகிறார். பலவிதமான நன்மைகள் எதிர்பாராதவிதமாக பலவழிகளிலிருந்தும் வந்து சேரும். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு அரச உதவி கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்க கல்விக்கடன் கிடைத்து படிப்பை நல்ல முறையில் தொடர முடியும்.வேற்று இனத்தவர், வேற்று மொழி பேசுபவர் , வேற்று மதத்தினர் மூலம் பல நன்மைகள் தற்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சிலர் புது ஆடை ஆபரணங்கள் வாங்குவர். எதிர்பாராத பண வரவு கிடைப்பதால், பழைய கடன்கள் அடைபடும்.கடன் சுமை குறையும். மூத்த சகோதரர் நன்மை அடைவார்கள். உங்களுக்கு மூத்த சகோதரர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். சிலர் புதிய சொத்துகள் , புதிய வண்டி வாகனங்கள் வாங்குவர். கடந்த காலத்தில் நீதிமன்றம், வழக்குகள் என்று அலைந்துகொண்டிருந்தவர்கள் அந்த தொல்லைகள் நீங்கி நிம்மதி அடைவார்கள். அந்த வழக்குகளில் தீர்ப்பு வருமானால், அது உங்களுக்கு சாதகமாகவே வரும்.
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் பார்வையாக உங்கள் ராசியையே பார்க்கிறார். இதன் காரணமாக உங்கள் மனம் உற்சாகத்தில் மிதக்கும். முகத்தில் பொலிவும் உடம்பில் சுறுசுறுப்பும் இருக்கும். மனோபலம் அதிகமாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் செயல்திறனும் புத்திகூர்மையும் அதிகமாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தைப் பார்க்கிறார். தந்தை மேனமையடைவார். தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் இடைக்கும். எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் முன்னேற்றம், எதிலும் வெற்றி, அதன்மூலம் மன மகிழ்ச்சி கிடைக்கும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் பதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், அவர்களால், தக்க சமயத்தில் தகுந்த உதவிகள் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.
இனி கேதுவின் சஞ்சார பலன்களைத் தெரிந்துகொள்வோம். கேதுபகவான் தனது 5ஆம் இடத்து சஞ்சாரத்தின் மூலம் புத்திரர் வழியில் சஞ்சலத்தை ஏற்படுத்துவார். உங்கள் புதல்வர்கள் வேற்று மத்தவரையோ அல்லது வேற்று இனத்தவரையோ திருமணம் செய்துகொள்வர் .புத்திரர் வழியில் செலவினங்களும் அதிகரிக்கும். இக்காலத்தில் போதைப்பொருள்களைப் பழக்கப்படுத்திக்கொள்வீர்கள். அந்த விஷயத்தில் 5ஆம் இடத்திலுள்ள கேது உங்களை படுகுழியில் தள்ளிவிடாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வது அவசியம். உங்களுக்கு ஆன்மிக சிந்தனையும் கடவுள் பக்தியும் அதிகமாகி உங்களை ஞான மார்க்கத்தில் ஈடுபடுத்தவும் வாய்ப்புள்ளது. அதனால் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது உங்களால் முடியும். இந்த சமயத்தில் பெரியோர்கள் ,ஞானிகளின் சந்திப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
உங்கள் பூர்வீகச் சொத்து எளிதில் கைக்கு வரமுடியாது. அதை அடைவதில் சண்டை சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். ராகு 11இல் இருந்தாலும் கூட கேது 5இல் இருந்துகொண்டு பணம் வருவதை தடை செய்துவிடுவதால், கிடைப்பது சொற்ப லாபமாகவே இருக்கும். அந்த சொற்ப லாபத்தில் மயங்கி சூது வழிகளையே பெரிதாக நம்பி வாழ்ந்தால் கைப்பொருளையும் இழக்க வேண்டி வரும். லாகிரி வஸ்துக்களும் உங்கள் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். அரசு சம்பந்தமான துறைகளில் இழுபறி நீடிப்பதால், வெற்றி தாமதமாகவே கிடைக்கும். உங்களில் சிலர் மந்திர தந்திர விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமின்றிக் கவனம் சிதறும். சிலர் காதல் விவகாரங்களில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுவது மட்டுமின்றி காதல் தோல்வி ஏற்பட்டு மனம் வாடவும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம் என்பதால், பூரண ஓய்வில் இருக்கவேண்டியது அவசியம். அத்துடன் மருத்துவர் ஆலோசனையிலும் மருத்துவப் பாதுகாப்பிலும் இருக்கவேண்டியது அவசியம்.
கேது தனது 3ம் பார்வையால் உங்கள் 7ஆம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பலனாக உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மனைவி கர்ப்பிணியானால் கவனம் மிகவும் அவசியம். மனைவி வழி உறவினர்களிடையே ஏதாவது பிரச்சினைகள் தோன்றினால், அதில் நீங்கள் தலையிடவேண்டாம். அப்படி அவசியம் ஏற்பட்டு தலையிட நேர்ந்தாலும் மிகவும் ஜாக்கிரதையாக பிரச்சினைகளைக் கையாளாவிட்டால், பிரச்சினைகள் உங்கள் மீதே திரும்பிவிடும் நிலை ஏற்படலாம். புதிய நண்பர்கள் கிடைத்து அவர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கலாம். சிலருக்கு புதிய கூட்டாளியும் கிடைத்து புதிய கூட்டுத் தொழில் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் கேது பகவான் தனது 11ஆம் பார்வையினால், உங்கள் 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இதன்பலனாக உங்கள் மனோபலம் அதிகரிக்கும். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் துணிவு பிறக்கும். இளைய சகோதரர்கள் மேன்மையடைவதோடு உங்களுக்கும் உதவியாக இருப்பார்கள். காது சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு சிறப்படையும்.
பொதுவாக கேதுவின் 5ஆம் இடத்து சஞ்சாரம் தொழில் பிரச்சினைகளையும் தொல்லைகளையும் கொடுக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக முன்னேறும். தேவைக்கேற்ற வருமானம் கொடுக்கும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வம்பு வழக்குகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏறப்டும். உறவுகள் பகையாகலாம். சரியான நேரத்துக்கு உண்ணவோ உறங்கவோ முடியாது. புதிய நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். தீர்த்த யாத்திரை மற்றும் ஆன்மிகப் பயணங்கள் தொடர வாய்ப்புண்டு.