Loading...
உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் மனதில் தம் நடிப்பால் நிலையான இடத்தைப் பிடித்தவர் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன். நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
திரை உலகில் சிவாஜி கணேசன் செய்த மகத்தான சாதனைகளையும், சேவைகளையும் போற்றும் வகையில் அவருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டப்படும், சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது சிவாஜிகணேசனுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.
மெரீனா கடற்கரையில் காமராஜர் சாலையும் ராதா கிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் பகுதியில் சிவாஜிகணேசன் இடுப்பில் கையை வைத்தபடி சுமார் 8 அடி உயரத்தில் கம்பீர சிலைலையை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி 2006-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிறகு சுமார் 50 ஊழியர்கள் சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றத் தொடங்கினார்கள். 4.30 மணிக்கு ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு, சிவாஜி சிலையை லாரியில் ஏற்றினார்கள். பின் சிவாஜி சிலை மணிமண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மெரீனாவில் இருந்து சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர், நடிகையர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹசன் சிவாஜி சிலை அகற்றப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம் அரசுக்கு அப்பால் என் அப்பா என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
தற்சமயம் அடையாரில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் நடிகர் திலகம் சிலை பாதுகாப்பாக நிறுவப்பட்டுள்ளது. விரைவில் மணிமண்டபம் திறக்கப்பட்டு, இந்த சிலையையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Loading...