டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் கூறும்போது, ‘‘தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அவர் எந்த நேரத்திலும் கட்சி அலுவலகத்துக்கு வருவார், போவார், யார் தடுப்பார்கள். அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்றார்.
எடப்பாடி அணியினர் தினகரன் கட்சிக்குள் வருவதை விரும்பவில்லை. எனவே அவரை ஓரம் கட்டுவதில் முனைப்புடன் செயல்படுகின்றனர்.
எனவே கெடு முடிவடைந்த நிலையில் தினகரன் அறிவித்தபடி தலைமை கழகத்துக்கு வருவது எப்போது? சுற்றுப்பயணத்தை தொடங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி தினகரன் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை முதல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தோப்பு வெங்கடாசலம், ஜெயந்தி, முன்னாள் எம்.பி. ரித்தீஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தண்டரை மனோகரன், செந்தமிழன், திருப்பூர் சிவகாமி, நடிகர் குண்டு கல்யாணம், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்பட நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்
அவர்களிடம் தினகரன் தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்தார்.
தினகரனை சந்தித்து விட்டு வெளியே வந்த முன்னாள் எம்.பி. ரித்தீஷ் கூறியதாவது:-
கட்சி அலுவலகத்துக்கு செல்வது பற்றியோ, சுற்றுப்பயணம் செல்வது பற்றியோ எதுவும் விவாதிக்கவில்லை. அதுபற்றி அவர்தான் முடிவு சொல்வார். எப்படியாவது கட்சி காப்பாற்றப்பட வேண்டும். எடப்பாடி ஆட்சி நன்றாகத்தான் நடத்துகிறார்.
ஆனால் கட்சிதான் சற்று தொய்வாக உள்ளது. எனவே கட்சிக்கு தன்னை (தினகரன்) பொறுப்பேற்று வழி நடத்த வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்.
ஓ.பி.எஸ். அணியை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே இணைப்பதற்கான சூழ்நிலையில் செயல்படவில்லை. எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஆசை. இனி அதுபற்றி ஓ.பி.எஸ். தான் முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி பற்றி தேர்தல் கமிஷன் தீர்மானிக்க முடியாது. தமிழகம் முழுவதும் பல பகுதியில் இருந்து தொண்டர்கள் பலர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தினகரன் தலைமை கழகத்திற்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதுபற்றி ஓரிரு நாளில் அறிவிப்பார். தமிழகத்தில் இப்போது உள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு பற்றி தினகரன் என்னிடம் ஆலோசனை நடத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.