கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்கப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் 2012 ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெற்றது. அவற்றின் முதல் அமர்வு ஒக்டோபர் மாதத்திலேயே கூட்டப்பட்டது.
இதன்படி அவற்றின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது.
தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. எனவேதான், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்கவுள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதை அங்கீகரித்துக் கொள்வதற்காக அது விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்பிரகாரம் இனி இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் ஒரே நாளிலேயே நடத்தப்படும்.
ஊவா, தென் ஆகிய மாகாண சபைகளுக்கு 2014ல் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் அவற்றின் ஆயுட்காலம் 2019ல் முடிவடைகின்றது. அத்துடன், வடக்கு, வடமேல் ஆகிய மாகாண சபைகளின் ஆயுட்காலம் 2018ல் முடிவடைகின்றது.
எனவே, அனைத்து மாகாண சபைகளுக்கும் 2019ல் தேர்தலை நடத்துவதே அரசின் உத்தேசமாக இருக்கின்றது. எனினும், இது குறித்து இன்னும் உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை.
அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடத்தப்பட்ட சந்திப்பின் போதும் மாகாண சபைத் தேர்தல்களை ஒரேநாளில் நடத்தும் திட்டம் குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றுக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு உரிய பதிலை வழங்குவதற்கு 10 நாட்கள் அரசு அவகாசம் கோரியுள்ளது.
இதற்கிடையில் அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒரேநாளில் இடம்பெறுவதற்குரிய சாத்தியமும் இல்லாமல் இல்லை.
ஜனாதிபதி நினைத்தால் மாகாண முதல்வர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் மாகாண சபைகளைக் கலைப்பதற்குரிய அதிகாரம் இருக்கின்றது.
9 மாகாண சபைகளில் வடக்கு, கிழக்கைத் தவிர ஏனையவற்றின் ஆட்சியதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் டிசம்பரில் நடத்தப்படும் என்றும், இதற்குரிய சகல ஏற்பாடுகளும் செம்டெம்பர் 25 ற்குள் நிறைவடையும் என்றும் அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.