தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் அமைச்சரவையை விரைவில் முழுமையாக மாற்றியமைப்பதில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கின்றார்.
அமைச்சரவை பற்றிய முடிவுகளில் எவரது தலையீடுமின்றி முடிவெடுக்கும் உரிமை தனக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறும். அது பகுதியாகவோ, முழுமையாகவோ என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும்
ரெலோவின் செயலாளர் ந.சிறிகாந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணியிலிருந்து இரவு 9.15 மணிவரையில் நடைபெற்றது.
இந்த நீண்ட நேர சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவிப்பார் என்று கூறிவிட்டு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புறப்பட்டுச் சென்றார்.
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,
நடைபெற்ற கூட்டத்தில் பங்காளிக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வரமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நான் அவரை வருமாறு அழைத்தேன். அவர் வந்தார். என் மீது அவர் வைத்துள்ள மதிப்பை அது காட்டுகின்றது.
கூட்டத்தில் தமிழ் மக்களின் நலன் கருதி பின்வரும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம். முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்றுணிபு அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது திருத்தியமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்துகின்றன.
அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது குறித்த அமைச்சர்கள் குற்றம் இழைத்தார்கள் என்று அர்த்தப்படாது.
அமைச்சரவை நியமனங்களைப் பொறுத்தமட்டில் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்து அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சரவையைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை தனக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் மேற்படி கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடாப்பிடியாக இருந்தார் என்று அறியமுடிந்தது.
அதேநேரத்தில் தனக்கு எதிரானவர்கள் என்று அவர் கருதும் சிலரை எந்தக் காரணம் கொண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்பதையும் அவர் ஆணித்தரமாக இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
எவர் பரிந்துரைத்தாலும் அந்த 5 பேரில் (மாகாண சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அணி என்று அடையாளப்படுத்தப்படுபவர்கள்) எவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க மாட்டேன் என்றார் அவர். இது கூட்டத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சரின் பிடிவாதத்தை அடுத்தும், அமைச்சரவை விடயத்தில் பங்காளிக் கட்சிகளின் ஆலோசனையை ஏற்பதற்கு அவர் தயாரில்லாததை அடுத்தும் அவர் பிடிவாதம் பிடிப்பதைப் போன்றே அமைச்சர்களை நியமிக்கும் அவரது உரிமையை அங்கீகரிப்பது என்று கட்சிகளின் தலைவர்கள் முடிவெடுத்தார்கள்.