ஆவா குழு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார்.
ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஆவா குழு தொடர்பான பிரச்சினை தலைதூக்கிய போது, ஆவா குழுவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே உள்ளதாகவும், ஆவா குழுவை அவரே உருவாக்கியதாகவும், ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுத்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நாம் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியிருந்தோம்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆவா குழுவின் பின்னணியில் யார் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் என ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
எனவே இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவது கட்டாயமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.