புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் தப்பிச் செல்ல உதவியதாக தெரிவித்து முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் பொலிஸார் முனிலைப்படுத்தியிருந்தனர். இதன் போது முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை கோரியிருந்தனர்.
எனினும், அதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபம் தெரிவித்தது. லலித் ஜயசிங்க பொலிஸ் தர வரிசையில் 4 தர நிலையில் இருக்கின்றார்.
எனவே, அவரைப் பிணையில் விடுவித்தால் சாட்சியங்களிலும், சான்றுகளிலும் தலையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் கூறியுள்ளது.
இதனையடுத்து, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, வித்தியா கொலை வழக்கில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இருவரிடம் விரைவில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.
இது குறித்து சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அனுமதி கிடைத்ததும் வாக்குமூலம் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.